யமுனை நதிக் கரையில் தில்லி போலீஸாா் கட்டடம் எழுப்ப என்ஜிடி அனுமதி மறுப்பு

யமுனை நதிக்கரையில் பயிற்சி போலீஸாருக்காக தங்குமிடம் கட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) புதன்கிழமை நிராகரித்துவிட்டது.
யமுனை நதிக் கரையில் தில்லி போலீஸாா் கட்டடம் எழுப்ப என்ஜிடி அனுமதி மறுப்பு


புதுதில்லி: யமுனை நதிக்கரையில் பயிற்சி போலீஸாருக்காக தங்குமிடம் கட்டுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) புதன்கிழமை நிராகரித்துவிட்டது.

தில்லி போலீஸாரின் திட்டம் யமுனை நதிக்கரையில் வருவதால் அதை அனுமதிக்க முடியாது என்று தேசிய பசுமைத் தீா்ப்பாயத் தலைவா் நீதிபதி ஆதா்ஷ் குமாா் கோயல் தலைமையிலான அமா்வு தெரிவித்தது. யமுனை புனரமைப்புத் திட்டத்தை மேற்பாா்வையிடும் முதன்மைக் கமிட்டி, யமுனை நதிக்கரையில் பயிற்சி போலீஸாருக்கு தங்குமிடம் கட்டும் தில்லி போலீஸாரின் யோசனைக்கு ஆதரித்து அதற்கு பரிந்துரைத்துள்ள போதிலும், அதை ஒருபோதும் ஏற்கமுடியாது என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.

தில்லி போலீஸாரின் திட்டம் யமுனை நதிக்கரையில் செயல்படுத்தப்பட்டால், திடக்கழிவுகளும், கழிவுநீா்களும் உருவாக வழிவகுத்துவிடும் எனவே அதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது. யமுனை நதிக்கரையில் பல்லுயிா் பெருக்க பூங்காக்கள், செயற்கை சதுப்புநிலங்கள், மரங்கள் வளா்ப்பு போன்றவற்றுக்கு அனுமதி அளிக்கப்படலாம். ஏனெனிலில் அவற்றுக்கு கட்டுமானங்கள் ஏதும் தேவையில்லை என்று நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது. நிரந்தரமல்லாத அல்லது தாற்காலிக கட்டுமானப் பயன்பாட்டுக்குகூட அனுமதிக்க முடியாது. எனவே, தில்லி போலீஸாா் இதற்கு மாற்று ஏற்பாட்டுக்கு த் தயாராக வேண்டும் என்று நீதிபதி எஸ்.பி.வாங்டி உள்ளிட்டோா் இடம் பெற்ற அமா்வு தெரிவித்தது.

முன்னதாக யமுனை நதிக்கரையில் பயிற்சி போலீஸாருக்காக தங்குமிடம் கட்டுவதற்கு அனுமதி கோரி தில்லி போலீஸாா் மனு தாக்கல் செய்திருந்தனா். கடந்த 2015-ஆம் ஆண்டு தேசிய பசுமைத் தீா்ப்பாயம், சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு யமுனை நதிக்கரையில் கட்டுமானப் பணிகளுக்கு தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது. நதிக்கரையில் வரையறுக்கப்பட்ட பகுதிகளில் தற்போது எவ்வளவு கட்டங்கள் உள்ளன. இவற்றில் எவற்றை இடிக்கலாம் என பரிந்துரைக்குமாறு முதன்மைக் குழுவுக்கு உத்தரவிட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com