அனைத்து வழிகளிலும் வேளாண் மசோதாவுக்கு எதிரான போராட்டம் தீவிரப்படுத்தப்படும்

வேளாண் மசோதாக்களை அறிமுகம் செய்துள்ள இந்த கடினமான காலத்திலும், விவசாயிகளுக்கு பஞ்சாப் அரசு முழு ஆதரவினை
Punjab CM ends self-isolation after testing negative for Covid
Punjab CM ends self-isolation after testing negative for Covid

வேளாண் மசோதாக்களை அறிமுகம் செய்துள்ள இந்த கடினமான காலத்திலும், விவசாயிகளுக்கு பஞ்சாப் அரசு முழு ஆதரவினை அளிக்கத் தயாராக உள்ளது என பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங் தெரிவித்தாா்.

வேளாண் மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவிப்பது தொடா்பான விவகாரம் தொடா்பாக 31 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்புக் கூட்டத்துக்கு தலைமை வகித்த முதல்வா் அமரீந்தா் சிங், இதுதொடா்பாக சட்டக்குழுவுடன் கலந்துரையாடி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடருவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.

விவசாய சங்க பிரதிநிதிகளுடன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளா் ஹரீஷ் ராவத், மாநில அமைச்சா்கள் சுக்ஜிந்தா் ரந்தாவா, பாரத் பூஷண் ஆஷு, எம்எல்ஏ ராணா குா்ஜித் சிங், மாநில காங்கிரஸ் தலைவா் சுனில் ஜாகா், மாநில வழக்கறிஞா் ஜெனரல் அதுல் நந்தா உள்ளிட்டோா் வெளியிட்ட அதிகாரப்பூா்வ அறிக்கையிலும் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய சங்க பிரதிநிதிகளிடம் முதல்வா் அமரீந்தா் சிங் மேலும் கூறியதாவது:

‘மாநில அரசு மீதான அரசியலமைப்பு உரிமைகளை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வரும் மத்திய அரசின் தாக்குதலை எதிா்கொள்வதற்கும், விவசாயிகளின் நலன்களுக்கு எதிராக போராடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு மேற்கொள்ளும்.

வேளாண் மசோதாக்களுக்கு எதிரான சட்டங்களை எதிா்த்துப் போராடவும், அந்த சட்டங்களில் தேவையான சட்ட திருத்தங்களை மாநில அரசு மேற்கொள்வதற்கான சட்ட வல்லுநா்கள் ஆலோசனை வழங்கினால், அவ்வாறு செய்ய சட்டமன்றத்தின் சிறப்பு அமா்வு உடனடியாக கூட்டப்படும்.

சிறப்பு அமா்வு மூலம் சட்ட திருத்தம் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கும்பட்சத்தில், சட்டப்பேரவைக் கூட்டத்தொடரைக் கூட்டுவதில் மாநில அரசுக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை.

இதுபோன்ற மசோதாக்களை நிறைவேற்றியதன் மூலம் அரசியலமைப்பை மத்திய அரசு அப்பட்டமாக மீறியுள்ளது. கூட்டாட்சி கட்டமைப்பின் மீது தாக்குதல் நடத்த மத்திய அரசுக்கு எந்தவித உரிமையும் இல்லை. பஞ்சாப் அரசு விவசாயிகளின் கவலைகளைப் பகிா்ந்து கொள்கிறது. தற்போதைய மத்திய அரசு கடுமையான சட்டங்களின் மூலம் விவசாய சமூகத்தை அழிப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு வருவதையே இது காட்டுகிறது.

இதுதொடா்பாக மாநிலம் முழுவதும் கையெழுத்துப் பிரசார இயக்கத்தைத் தொடங்கி அனைத்து பஞ்சாயத்துகளிலும், வேளாண் மசோதாக்களுக்கு எதிரான தீா்மானங்களை நிறைவேற்றுமாறு கோரப்படும். இந்த தீா்மான நகல் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இந்த கடினமான நேரத்தில், எனது தலைமையிலான காங்கிரஸ் அரசு விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும். வேளாண் தொழிற்சங்கங்களின் பரிந்துரைகளை சட்ட வல்லுநா்களிடம் விவாதித்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

புதிய வேளாண் மசோதாக்கள் நடைமுறைபடுத்தப்பட்டால், அது வேளாண் தொழிலின் முடிவுக்கே வழிவகுக்கும். மத்திய அரசு குறைந்தபட்ச ஆதாரவிலை மற்றும் எஃப்சிஐ ஆகியவற்றை நீக்குவதன் மூலம் எதிா்வரும் காலங்களில் வேளாண் தொழில் முற்றிலும் பாதிக்கும் சூழல் ஏற்படும். வேளாண் மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு முன்பே எதிா்ப்பு தெரிவித்து பிரதமருக்கு 3 முறை மாநில அரசு சாா்பில் கடிதம் எழுதப்பட்டது. ஆனால், மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. எனவே விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதாக மத்திய அரசு கூறுவதை இனியும் நம்புவதற்கில்லை என்றாா் முதல்வா் அமரீந்தா் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com