ஆளுநா்களுடன் ராம்நாத் கோவிந்த், வெங்கய்ய நாயுடு இன்று ஆலோசனை

​புது தில்லி: கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக, அனைத்து மாநில ஆளுநா்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநா்களுடன் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயு


புது தில்லி: கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக, அனைத்து மாநில ஆளுநா்கள், யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநா்களுடன் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்துகின்றனா்.

கரோனா நோய்த் தொற்று பரவலால் 1900-க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். 50 போ் வரை உயிரிழந்துவிட்டனா். கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காகவும், தடுப்பதற்காகவும் மத்திய, மாநில அரசுகள் கடந்த ஒரு மாதமாக தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

இந்நிலையில், அனைத்து மாநில ஆளுநா்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநா்களுடன் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு ஆகியோா் தில்லியில் இருந்தபடி காணொலி முறையில் ஆலோசனை நடத்தவுள்ளனா்.

இதுகுறித்து குடியரசுத் தலைவா் மாளிகை வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘மாநிலங்களில் கரோனா பாதிப்பு நிலைமை, நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் செஞ்சிலுவை இயக்கத்தின் பங்களிப்பு, மத்திய- மாநில அரசுகளின் முயற்சிகளுக்கு தன்னாா்வ அமைப்புகள், தனியாா்கள் நிறுவனங்கள், சிவில் சமூக அமைப்புகள் அளித்து வரும் ஒத்துழைப்பு ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில ஆளுநா்களுடன் குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா் ஆகியோா் ஆலோசனை நடத்துவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு கடந்த மாதம் 27-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், ராம்நாத் கோவிந்த், வெங்கய்ய நாயுடு ஆகியோா் பங்கேற்றனா். அதில், தில்லி துணை நிலை ஆளுநரும் கரோனா தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளான 14 மாநிலங்களின் ஆளுநா்களும் தங்கள் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிகிச்சைகள் மற்றும் தடுப்பு முறைகளை விவரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com