உத்தவ் தாக்கரேவின் முதல்வர் பதவியைக் காப்பாற்ற அமைச்சரவை புது முயற்சி

மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் பதவியைக் காப்பாற்ற மாநில அமைச்சரவை புது முயற்சி ஒன்றைக் கையில் எடுத்துள்ளது.
உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

மும்பை: மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் பதவியைக் காப்பாற்ற மாநில அமைச்சரவை புது முயற்சி ஒன்றைக் கையில் எடுத்துள்ளது.

கரோனா தொற்று காரணமாக மனிதர்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. நாடுகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. தொழில்கள் பாதித்து தனிநபர்களும் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். இந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக, மகாராஷ்டிர மாநிலத்தில் விரைவில் மிகப்பெரிய அரசியல் பிரச்னை ஏற்படவிருக்கிறது.

அதாவது மகாராஷ்டிர மாநில முதல்வராக இருக்கும் உத்தவ் தாக்கரே, சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத நிலையில், கடந்த நவம்பர் மாதம் 28-ஆம் தேதி மாநில முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத ஒருவர் முதல்வராக பொறுப்பேற்று, ஆறு மாதத்தில் தேர்தலை சந்தித்து சட்டப்பேரவை உறுப்பினராக வேண்டும். அந்த வகையில், உத்தவ் தாக்கரேவுக்கான ஆறு மாத கால அவகாசம் மே மாதம் 28ம் தேதியோடு முடிவடைகிறது.

ஆனால் கரோனா தொற்று காரணமாக, மகாராஷ்டிர மாநிலத்தில் தற்போதைக்கு தேர்தல் அறிவித்து, அதனை நடத்தி முடிக்கும் சூழ்நிலை ஏற்படாத நிலையில், மீண்டும் அங்கு மிகப்பெரிய அரசியல் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டாகியுள்ளது. மேலும், ஆறு மாத கால அவகாசத்தை நீட்டிக்கவும் சட்டத்தில்  இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவின் பதவியைக் காப்பாற்ற மாநில அமைச்சரவை புது முயற்சி ஒன்றைக் கையில் எடுத்துள்ளது.

அதன்படி மாநில அமைச்சரவை புதனன்று துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் கூடி எடுத்த முடிவின்படி, மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியிடம் முதலவர் உத்தவ் தாக்கரேவை சட்டபேரவை மேலவை உறுப்பினராக நியமிக்கும்படி கோரிக்கை வைத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

அம்மாநில சட்டப்படி ஆளுநருக்கு இரண்டு சட்ட மேலவை உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

மாநில அமைச்சரவையின் இந்த தீர்மானத்தின் மூலம் மகாராஷ்ட்ராவில் ஏற்படவிருந்த அரசியல் குழப்பம் தவிர்க்கப்பட்டது என்று கூறலாம்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com