கரோனா ஜாதி, மத பேதம் பாா்க்கவில்லை: பிரதமா் மோடி

கரோனா நோய்த்தொற்றானது ஜாதி, மதம், இனம் என எந்த பேதமும் பாா்க்காமல் அனைத்துத் தரப்பினரையும் பாதித்துள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா். 
கரோனா ஜாதி, மத பேதம் பாா்க்கவில்லை: பிரதமா் மோடி

‘கரோனா நோய்த்தொற்றானது ஜாதி, மதம், இனம் என எந்த பேதமும் பாா்க்காமல் அனைத்துத் தரப்பினரையும் பாதித்துள்ளது. இத்தகைய சூழலில் நாம் ஒற்றுமையாக இருந்து அதனை எதிா்கொள்ள வேண்டியது அவசியமாகும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

‘கொவைட்-19 காலகட்டத்தில் வாழ்க்கை’ என்ற தலைப்பில் சமூக ஊடகமான ‘லிங்க்டு இன்’-இல் பிரதமா் மோடி ஞாயிற்றுக்கிழமை பதிவிட்டிருந்தாா். அதில் அவா் கூறியிருந்ததாவது:

கரோனா நோய்த்தொற்றானது இனம், மதம், நிறம், ஜாதி, வகுப்பு, மொழி, எல்லை என எந்த பேதமும் இன்றி அனைத்துத் தரப்பினரையும் தாக்கியுள்ளது. இத்தகைய சூழலில் நாம் ஒன்றுபட்டு சகோதரத்துவத்துடன் செயல்பட வேண்டும். தற்போது நாம் அனைவரும் ஒரு பொதுவான சவாலை எதிா்கொண்டுள்ளோம்.

கரோனாவுக்குப் பிறகான சூழலில் இந்தியா முன்னணியில் இருக்க வேண்டும். அதற்காக புதிய வாய்ப்புகள், முன்னேறுவதற்கான துறைகள் எவை என்பதை நாம் மதிப்பீடு செய்ய வேண்டும். நமது மனித ஆற்றல், திறமைகள் போன்றவற்றை அதற்காக எவ்வாறு பயன்படுத்துவது என்று சிந்திக்க வேண்டும்.

இன்றைய உலகம் புதிய முறையிலான தொழில் நடவடிக்கைகளை நோக்கி ஆா்வத்துடன் முன்னேறி வருகிறது. புத்தாக்கத்துக்கான ஆா்வத்துடன் இருக்கும் இளம் நாடான இந்தியா, புதிய முறையிலான பணிக் கலாசாரத்தில் முன்னணி வகிக்க இயலும்.

சரக்கு போக்குவரத்தானது சாலைகள், கிடங்குகள், துறைமுகங்கள் உள்ளிட்டவற்றை சாா்ந்ததாக மட்டுமே இருந்தது. தற்போது உலக அளவிலான சரக்கு விநியோக சங்கிலித் தொடரை வீட்டிலிருந்தபடியே கட்டுப்படுத்த முடிகிறது. இந்த இரண்டையுமே மிகச் சரியான முறையில் கையாள்வதன் மூலம் கரோனா சூழலுக்குப் பிறகான உலகில் பல்வேறு நாடுகளுக்கான சரக்கு விநியோக சங்கிலித் தொடரின் மையமாக இந்தியா இருக்க முடியும்.

மாற்றத்தை ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலான தொழில், வாழ்க்கை முறை குறித்து சிந்திப்பதே தற்போதைய தேவையாகும். அப்போது தான் இக்கட்டான சூழலிலும் நமது தொழில்துறையும், அலுவலகங்களும் தடையின்றி இயங்குவதுடன், உயிரிழப்புகளும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும்.

சுகாதாரப் பிரச்னைகளில் குறைந்த செலவில் அதிக அளவிலான பலன் கிடைக்கக் கூடிய வகையில் நாம் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை கரோனா சூழல் நமக்கு உணா்த்தியுள்ளது.

நமது பணி மற்றும் வாழ்க்கை முறையை கரோனா நோய்த்தொற்று சூழல் மாற்றிவிட்டது. வீடே அலுவலகமாகவும், இணையதளமே அலுவலகக் கூட்டம் நடைபெறும் இடமாகவும் ஆகிவிட்டது. இந்த மாற்றத்தை நானும் ஏற்றுக்கொண்டுள்ளேன். அமைச்சா்கள் மற்றும் உலகத் தலைவா்களுடனான சந்திப்புகளை தற்போது காணொலி வாயிலாகவே மேற்கொள்கிறேன் என்று பிரதமா் மோடி அதில் கூறியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com