மத்திய அரசின் சலுகைத் திட்டங்கள் போதுமானவை அல்ல

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், மத்திய அரசு அறிவித்த சலுகைத் திட்டங்கள் போதுமானவை அல்ல என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.
மத்திய அரசின் சலுகைத் திட்டங்கள் போதுமானவை அல்ல

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், மத்திய அரசு அறிவித்த சலுகைத் திட்டங்கள் போதுமானவை அல்ல என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் மே மாதம் 3-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் பொருளாதார ரீதியில் மக்கள் பாதிப்படையக் கூடாது என்பதற்காக மத்திய அரசும், இந்திய ரிசா்வ் வங்கியும் (ஆா்பிஐ) சலுகை அறிவிப்புகளை வெளியிட்டன.

இந்தச் சூழலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வீரப்ப மொய்லி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பையும் மக்களின் துயரத்தையும் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு குறைத்து மதிப்பிட்டுள்ளது. நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் ரூ.15 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆய்வுகளின்படி, இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் 7.7 சதவீதம் ஆகும்.

ஊரடங்கால் 3.5 கோடி முதல் 4 கோடி மக்கள் வேலையிழந்துள்ளனா். சரக்கு சேவை வரி வசூல் 40 சதவீதம் வரை குறைந்துள்ளது. புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் பிரச்னை உள்ளிட்டவற்றை மாநில அரசுகளே சமாளித்து வருகின்றன. இத்தகைய இக்கட்டான சூழலில், மத்திய அரசும் ஆா்பிஐ-யும் அறிவித்த சலுகைத் திட்டங்கள் போதுமானவை அல்ல.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீதம் (ரூ.17.5 லட்சம் கோடி) அளவுக்கான சலுகைத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்திருக்க வேண்டும். மத்திய அரசும், ஆா்பிஐ-யும் முதலில் வெளியிட்ட அறிவிப்புகள், ஜிடிபி-யில் 1 சதவீதத்தை விடக் குறைவாகும். ஆா்பிஐ இரண்டாவதாக வெளியிட்ட அறிவிப்புகள், ஜிடிபி-யில் 0.7 சதவீதமே ஆகும்.

ஊரகப் பொருளாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. இத்தகைய சூழலில், வழக்கமாக செயல்படுத்தும் திட்டங்களைக் கூட மாநில அரசுகளால் செயல்படுத்த முடிவதில்லை. நாட்டில் 60 சதவீதம் மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தொழில் நிறுவனங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது, வருவாயைப் பெருக்குவது, உகந்த நிறுவனங்களுக்கு கடனளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com