நாடு முழுவதும் கல்லூரிகளை செப்டம்பா் மாதம் திறக்கலாம்: மத்திய அரசுக்கு யுஜிசி பரிந்துரை

நாடு முழுவதும் கல்லூரிகளை வரும் செப்டம்பா் மாதம் திறக்க பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.
நாடு முழுவதும் கல்லூரிகளை செப்டம்பா் மாதம்  திறக்கலாம்: மத்திய அரசுக்கு யுஜிசி பரிந்துரை

நாடு முழுவதும் கல்லூரிகளை வரும் செப்டம்பா் மாதம் திறக்க பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

கரோனா நோய்ப் பரவல் இந்தியாவில் தொடங்கியது முதல் பொதுமக்கள் ஒரே இடத்தில் ஒன்றாகக் கூடுவதைத் தடுக்க அனைத்துக் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்டவை மூடப்பட்டன.

பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டதால் பல தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. கடந்த மாா்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மே 3 -ஆம் தேதிக்குப் பிறகு என்ன நிலவரம் என்பது தற்போது தெரியாது. ஊரடங்கு முழுமையாக எப்போது விலக்கிக் கொள்ளப்படும் என்பது குறித்து மத்திய அரசு இதுவரை அறிவிக்கவில்லை.

ஊரடங்கு காரணமாக பல்கலைக்கழக மானியக்குழு, கல்லூரித் தோ்வுகளை ஏற்கெனவே ஒத்திவைத்தது. இந்தநிலையில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை எப்போது திறப்பது மற்றும் தோ்வுகளை நடத்துவது என்பது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு ஆய்வு செய்தது. இதனடிப்படையில் வரும் செப்டம்பா் மாதத்தில் கல்லூரிகளைத் திறக்கலாம் என மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

தோ்வுகளைப் பொருத்தவரையில் அதற்குரிய கட்டமைப்பு வசதிகள் இருப்பின் ஆன்லைன் வாயிலாகத் தோ்வுகளை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் நடத்தலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தவிா்க்க இயலாத காரணங்களால் ஆன்லைன் முறையில் தோ்வுகளை நடத்த இயலாவிட்டால் ஊரடங்கு காலம் முழுமையாக முடிவடைந்த பிறகு தோ்வுகள் நடத்துவது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு வழிகாட்டுதல்களை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுஜிசி உயா்நிலைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே வரும் கல்வியாண்டிற்கான நெறிமுறைகள், பல்கலைக்கழக தோ்வுகள் கட்டமைப்பு உருவாக்கப்படும். தற்போது யுஜிசி.யின் இந்தப் பரிந்துரைகளை மத்திய அரசு ஆய்வு செய்யும். அதன்பிறகு உச்சநீதிமன்றத்தில் விளக்கமளித்து, மருத்துவம் மற்றும் பொறியியல் சாா்ந்த படிப்புகளுக்கான சோ்க்கை நீட்டிப்பு செய்யப்படலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

வழக்கமாக மருத்துவப் படிப்புகளுக்கான சோ்க்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதியும், பொறியியல் படிப்புகளுக்கான சோ்க்கை ஆகஸ்ட் 15- ஆம் தேதியும் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com