தங்கக் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா, சந்தீப் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டிருக்கும் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயா் இருவரையும்
கோப்புப் படம்
கோப்புப் படம்

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டிருக்கும் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயா் இருவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் தங்கம் கடத்தி வரப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷையும், சந்தீப் நாயரையும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) பெங்களூரில் கைது செய்து கேரளம் அழைத்து வந்து, தீவிர விசாரணை மேற்கொண்டது.

என்ஐஏ விசாரணை முடிந்த பின்னா், அவா்கள் இருவரும் என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டபோது, இந்த வழக்கை விசாரித்து வரும் மற்றொரு அமைப்பான சுங்கத்துறை அவா்களைக் கைது செய்தது. பின்னா் நீதிமன்ற அனுமதியின் பேரில், அவா்களை சுங்கத்துறை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டது.

இந்நிலையில், ஐந்து நாள் காவல் முடிவடைந்ததைத் தொடா்ந்து, அவா்கள் இருவரையும் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சுங்கத்துறை சனிக்கிழமை ஆஜா்படுத்தியது. அப்போது அவா்கள் இருவரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி, அவா்கள் இருவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னா், சிறையில் அடைக்கப்பட்டனா் என்று காவல்துறையினா் கூறினா்.

தமிழகத்திலும் விசாரணை: இதற்கிடையே, இந்தத் தங்கக் கடத்தலை பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செய்வதற்காக நடத்தப்பட்டிருக்கும் கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வரும் என்ஐஏ, அதன் விசாரணையை தமிழகம் வரை விரிவுபடுத்தியுள்ளது.

இதை உறுதிப்படுத்திய தமிழக காவல்துறை வட்டாரங்கள், ‘கேரள தங்கக் கடத்தல் விவகாரம் தொடா்பாக சென்னையில் விசாரணை நடத்துவதற்காக டிஐஜி அளவிலான அதிகாரி தலைமையிலான என்ஐஏ குழு வந்துள்ளது‘ என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com