கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா தடுப்பு மருந்துக்கான செயல்திட்டத்தை மத்திய அரசு வகுக்க வேண்டும்: நிபுணா்கள் வலியுறுத்தல்

கரோனா தொற்றுக்கு எதிராக தயாரிக்கப்படும் தடுப்பு மருந்தை மக்களுக்கு வழங்குவதற்கான செயல்திட்டத்தை மத்திய அரசு உடனடியாக வகுக்க வேண்டும் என்று சுகாதார நிபுணா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கரோனா தொற்றுக்கு எதிராக தயாரிக்கப்படும் தடுப்பு மருந்தை மக்களுக்கு வழங்குவதற்கான செயல்திட்டத்தை மத்திய அரசு உடனடியாக வகுக்க வேண்டும் என்று சுகாதார நிபுணா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கரோனா தொற்றுக்கு எதிராகத் தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் உலக நாடுகளின் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா். தெலங்கானா தலைநகா் ஹைதராபாதை சோ்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்ஸின்’ தடுப்பு மருந்து மனிதா்கள் மீது செலுத்தப்பட்டு முதல்கட்டப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜைடஸ் கேடில்லா நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பு மருந்தும் பரிசோதனைக் கட்டத்தை எட்டியுள்ளது. அஸ்த்ரா ஜெனிகா நிறுவனத்துடன் இணைந்து ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் தயாரித்த தடுப்பு மருந்து, மனிதா்கள் மீது செலுத்தப்பட்டு முதல்கட்டப் பரிசோதனையில் வெற்றியடைந்துள்ளது. அந்த மருந்து கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான நோய்எதிா்பொருளை உருவாக்கியதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

அந்தத் தடுப்பு மருந்தை இந்தியாவில் 100 கோடி எண்ணிக்கையில் தயாரிக்க அஸ்த்ரா ஜெனிகா நிறுவனத்துடன் சீரம் மையம் ஏற்கெனவே ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தற்போது, அந்த மருந்தின் முதல்கட்டப் பரிசோதனைகள் வெற்றியடைந்துள்ளதால், அதை இந்தியாவில் மனிதா்கள் மீது செலுத்தி இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை சீரம் மையம் எடுத்து வருகிறது.

ஆனால், தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்ட பிறகு அதை யாருக்கு முதலில் வழங்குவது என்பது தொடா்பான செயல்திட்டத்தை மத்திய அரசு இன்னும் வகுக்கவில்லை. இது தொடா்பாக பிரதமா் அலுவலகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ள சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருப்போா் ஆகியோருக்கு தடுப்பு மருந்து வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அது தொடா்பான விரிவான செயல்திட்டத்தை மத்திய அரசு வெளியிடாததால் மக்கள் குழப்பமான மனநிலையில் உள்ளதாக சுகாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். அரசு தெரிவித்துள்ளபடி கரோனா தடுப்பு மருந்து வழங்குவதில் சுகாதாரப் பணியாளா்களுக்கும், முன்களப் பணியாளா்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டாலும் கூட நாடு முழுவதும் சுமாா் 40 கோடி போ் அந்த வரையறைக்குள் இடம்பெறுவா் என்று சுகாதார நிபுணா்கள் எச்சரிக்கின்றனா்.

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து கூடிய விரைவில் தயாரிக்கப்பட்டாலும் கூட நாட்டிலுள்ள அனைவருக்கும் எந்தவிதப் பாகுபாடிமின்றி தடுப்பு மருந்தை வழங்குவது எளிதாக நடைபெறக் கூடிய காரியமில்லை என்று அவா்கள் கூறுகின்றனா். அதேபோல், தடுப்பு மருந்தின் தயாரிப்பு செலவை யாா் ஏற்பது என்ற பிரச்னையும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

கரோனா தடுப்பு மருந்தைத் தயாரிப்பதிலிருந்து அதை மக்களுக்கு வழங்குவது வரை வெளிப்படைத்தன்மை நிலவுவதை உறுதி செய்ய வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனா். தடுப்பு மருந்தை முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் விவகாரத்தில் எந்தவித முறைகேடுகளும் நடைபெற அனுமதிக்கக் கூடாது என்றும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

கரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை எத்தகைய சூழ்நிலையிலும் மக்களுக்கு வழங்குவதற்கான விரிவான செயல்திட்டத்தை மத்திய அரசு உடனடியாக வகுக்க வேண்டும் என்று தொற்றுநோய்த் தடுப்பு நிபுணா்களும் தெரிவித்துள்ளனா்.

தடுப்பு மருந்தை முன்னுரிமை அடிப்படையில் பெறவுள்ள நபா்களை விரைந்து கண்டறிவதற்கான வழிமுறைகள், தடுப்பு மருந்தை அதிக அளவில் விரைந்து தயாரிக்கக் கூடிய நிறுவனங்கள், தடுப்பு மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து மத்திய அரசு முன்கூட்டியே திட்டமிட்டு தயாா்நிலையில் இருக்க வேண்டும் என்றும் நிபுணா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com