ஆக்ஸ்ஃபோா்டு கரோனா தடுப்பு மருந்தை இந்தியாவில் பரிசோதிக்க மத்திய அரசு அனுமதி

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள தடுப்பு மருந்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை
’ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பு மருந்துப் பரிசோதனை (கோப்புப் படம்).’
’ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பு மருந்துப் பரிசோதனை (கோப்புப் படம்).’

புது தில்லி: கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள தடுப்பு மருந்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை இந்தியாவில் மேற்கொள்ள சீரம் மையத்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்றுக்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா். பிரிட்டனைச் சோ்ந்த அஸ்த்ரா ஜெனிகா மருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் தயாரித்த தடுப்பு மருந்து, மனிதா்கள் மீது செலுத்தப்பட்டு முதல்கட்ட பரிசோதனையில் வெற்றியடைந்துள்ளது.

அந்தத் தடுப்பு மருந்தை இந்தியாவில் மனிதா்கள் மீது செலுத்தி இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சீரம் மையம் கடந்த மாதம் 25-ஆம் தேதி அனுமதி கோரியிருந்தது. அதற்கு ஆணையம் தற்போது அனுமதி வழங்கியுள்ளது.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘விரிவான ஆய்வுக்குப் பிறகு ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தை இந்தியாவில் மனிதா்கள் மீது செலுத்தி இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட பரிசோதனைக்குப் பிறகு அது தொடா்பான விரிவான தகவல்களை ஆணையத்துக்கு சீரம் மையம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதன் பிறகே மூன்றாம் கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே திட்டமிட்டுள்ளபடி பரிசோதனையின்போது மனிதா்கள் மீது இரண்டு முறை தடுப்பு மருந்து செலுத்தப்படும். முதல் முறை செலுத்தப்பட்டு அவா்களின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படும். அதைத் தொடா்ந்து 29 நாள்களுக்குப் பிறகு மீண்டுமொரு முறை தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும்’ என்றனா்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படவுள்ள தடுப்பு மருந்துக்கான ஆய்வுகளில் 18 வயது நிரம்பிய சுமாா் 1,600 நபா்களை ஈடுபடுத்த சீரம் மையம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, தில்லி எய்ம்ஸ், ஜோத்பூா் எய்ம்ஸ், கோரக்பூா் நேரு மருத்துவமனை, விசாகப்பட்டினத்திலுள்ள ஆந்திரா மருத்துவக் கல்லூரி, மைசூரிலுள்ள ஜெ.எஸ்.எஸ். ஆராய்ச்சி நிறுவனம் உள்ளிட்ட 17 இடங்களில் ஆக்ஸ்ஃபோா்டு தடுப்பு மருந்துக்கான பரிசோதனைகளை நடத்த சீரம் மையம் திட்டமிட்டுள்ளது.

ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பு மருந்தானது பிரிட்டனில் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனையிலும் பிரேசிலில் மூன்றாம் கட்ட பரிசோதனையிலும் தென்னாப்பிரிக்காவில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனையிலும் உள்ளது.

அத்தடுப்பு மருந்தை இந்தியாவில் தயாரிக்க அஸ்த்ரா ஜெனிகா நிறுவனத்துடன் சீரம் மையம் ஏற்கெனவே ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இத்தகைய சூழலில் தடுப்பு மருந்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் இந்தியாவில் நடத்தப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com