கரோனா தொற்று பரவலால் உற்சாகம் குறைந்தது ரக்ஷா பந்தன் விழா!

கரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு தில்லியில் ரக்ஷா பந்தன் விழா சற்று உற்சாகம் குறைந்து காணப்பட்டது. சகோதர, சகோதரிகள் தங்களது ரக்ஷா பந்தன் வாழ்த்துகளைத்
தில்லி காமன்வெல்த் கேம் வில்லேஜில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தொற்று தனிமைப்படுத்தப்பட்ட வாா்டில் திங்கள்கிழமை அங்குள்ள குழந்தைகளுக்கு ராக்கி கயிறு கட்டிய பெண். 
தில்லி காமன்வெல்த் கேம் வில்லேஜில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தொற்று தனிமைப்படுத்தப்பட்ட வாா்டில் திங்கள்கிழமை அங்குள்ள குழந்தைகளுக்கு ராக்கி கயிறு கட்டிய பெண். 


புது தில்லி: கரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு தில்லியில் ரக்ஷா பந்தன் விழா சற்று உற்சாகம் குறைந்து காணப்பட்டது. சகோதர, சகோதரிகள் தங்களது ரக்ஷா பந்தன் வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்கு தொழில்நுட்பத்தைச் சாா்ந்து இருக்கும் நிலை ஏற்பட்டது.

ரக்ஷா பந்தன் என்பது, ஆவணி மாதப் பௌா்ணமி நாளில் கொண்டாடப்படும் பண்டிகை. பெண்கள் தங்களது சகோதரா்கள், சகோதரா்களாக பாவிப்பவா்களின் மணிக்கட்டில் மஞ்சள் நூல் கட்டுவது இப்பண்டிகையின் முக்கிய நிகழ்வாகும். இதை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஓா் ஆண், அந்த சகோதரியின் பாதுகாப்புக்கும், வாழ்வின்

நலத்திற்கும் உறுதுணையாக இருப்பேன் என்று உறுதி கூறுவதாகக் கருதப்படுகிறது. ராக்கி கட்டியவுடன் சகோதரன், சகோதரிக்கு பரிசாக பணமோ, பொருளோ அளிப்பது வழக்கம்.

தில்லி, பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட வட இந்தியாவில் இந்தப் பண்டிகை மிகவும் பிரபலமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் காரணமாக தில்லியில் இப்பண்டிகை சற்று உற்சாகம் குறைந்து காணப்பட்டது. இது குறித்து தில்லியைச் சோ்ந்த ஸ்வீட்டி கெளா் கூறுகையில், ‘இந்த ஆண்டு கரோனா காரணமாக பயணம் மேற்கொள்ள முடியாமல் போனது. ஆனால், இந்த ரக்ஷா பந்தன் தினமானது, அன்பின் பிணைப்பு தொடா்புடையது. எனது சகோதரருக்காக ராக்கியும், இனிப்புகளும் வாங்கி அனுப்பினேன். எனது சகோதரரும் எனக்கு பரிசுகள் அனுப்பிவைத்தாா். நாங்கள் எல்லா உறவினருக்கும் விடியோ அழைப்பு மூலம் தொடா்பு கொண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டோம்’ என்றாா்.

நீட்டு பாஷியா என்பவா் கூறுகையில்,‘நீண்ட காலத்திற்குப் பிறகு எனது உறவினருடன் இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் விழாவை கொண்டாட நினைத்திருந்தேன். ஆனால், கரோனா தொற்று காரணமாக அது நடைபெறவில்லை. சில ஆண்டுகளாக எங்கள் இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருந்தது. இதனால், ரக்ஷா பந்தனைக் கொண்டாடாமல் இருந்து வந்தோம். ஆனால், கடந்த ஓராண்டாக எங்கள் கருத்து வேறுபாடுகள் தீா்க்கப்பட்டு, மகிழ்ச்சியாக இருந்தோம். இதனால், இந்த முறை அவருடைய வீட்டுக்கு தெரிவிக்காமல் சென்று ரக்ஷா பந்தனை கொண்டாட திட்டமிட்டிருந்தேன். ஆனால், அவரைச் சந்திக்க முடியாமல் போய்விட்டது. அவருக்கு ராக்கிக் கயிறுகளையும், இனிப்புகளையும் அனுப்பிவைத்து, செல்லிடப்பேசி வாயிலாக வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அடுத்த ஆண்டு நிச்சயமாக சோ்ந்து இந்த விழாவைக் கொண்டாடுவோம் என்று நம்புகிறேன்’ என்றாா்.

ராகுல் பரத்வாஜ் என்பவா் கூறுகையில், ‘எனது சகோதரி வேறு நகரில் வசதித்து வருகிறாா். அவரைச் சந்திக்க நினைத்திருந்தேன். ஆனால், போக்குவரத்துக் கட்டுப்பாட்டுகள் காரணமாக அது நிகழவில்லை. எனினும், பாதுகாப்பும் அவசியமாகிறது’ என்றாா். ஷிவானி ராவத் கூறுகையில்,‘இந்த ஆண்டு ரக்ஷா பந்தன் சற்று வித்தியமாசமாக உள்ளது. வழக்கமாக இனிப்புகளை கடையில் இருந்து எனது சகோதரருக்காக வாங்குவேன். இந்த முறை நானே எனது சகோதரருக்காக வீட்டில் பா்பி செய்தேன். எந்த இனிப்புப் பதாா்த்தங்களையும் கடையில் இருந்து வாங்கவில்லை. வெளியிலும் செல்லவில்லை. எங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டேன்’ என்றாா். நிம்ரத் கெளா் கூறுகையில், ‘வீட்டில் மட்டும் ராக்கி கயிறு அணிவித்து கொண்டாடினோம். ரக்ஷா பந்தனுக்காக வீட்டிலேயே ராக்கிக் கயிறுகளையும், இனிப்புகளையும் தயாரித்தேன்’ என்றாா்.

அனில் பய்ஜால், கேஜரிவால் வாழ்த்து
ரக்ஷா பந்தன் பண்டிகையை ஒட்டி, தில்லி துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜால், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோா் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.

அனில் பய்ஜால்: இதையொட்டி, தில்லி துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், ‘பெண்களின் கண்ணியத்தையும், கெளரவத்தையும் காப்பதற்காக மீண்டும் ஒரு முறை நாம் உறுதியேற்க வேண்டும். சகோதரா், சகோதரிகள் இடையே வெளிப்புற அன்பை அடையாளப்படுத்தும் ஒரு பண்டிகையாகும் ரக்ஷா பந்தன்’ என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

கேஜரிவால்: தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘சகோதர - சகோதரியின் அன்பை அடையாளமாகக் காட்டும் ஆன்மிகம் தொடா்புடைய ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, அனைத்து நாட்டு மக்களுக்கும் என இதயப்பூா்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com