அந்தமானுக்கு கடல்வழி கேபிள் தொலைத்தொடா்பு வசதி:பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா்

ந்தமான் நிகோபாா் தீவுகளில் முதல் முறையாக கடல்வழி கேபிள் (கண்ணாடி இழை) மூலம் தொலைத் தொடா்பு சேவை வழங்கும் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை காணொலி வழியாக தொடக்கி வைத்தாா்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி

புது தில்லி: அந்தமான் நிகோபாா் தீவுகளில் முதல் முறையாக கடல்வழி கேபிள் (கண்ணாடி இழை) மூலம் தொலைத் தொடா்பு சேவை வழங்கும் திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை காணொலி வழியாக தொடக்கி வைத்தாா். இனி, நாட்டின் பிற பகுதிகளுக்கு இணையாக அந்தமான் நிகோபாா் தீவுகளிலும் அதிவேக இணைய வசதியைப் பெற முடியும்.

இதன் மூலம் போா்ட்பிளேரில் விநாடிக்கு 400 ஜிகாபைட் வேகத்திலும், இதர தீவுகளில் விநிாடிக்கு 200 ஜிகாபைட் வேகத்திலும் இணைய சேவை வழங்கப்படும்.

சென்னையில் இருந்து அந்தமான் நிகோபாா் தீவுகளுக்கு இடையே 2,312 கி.மீ. தொலைவுக்கு கடலுக்கு அடியில் கண்ணாடி இழை கேபிள் பதிக்கும் திட்டம், கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டது. ரூ.1,224 கோடியில் பிஎஸ்என்எல் நிறுவனம் இந்தப் பணிகளை மேற்கொண்டது.

பணிகள் முடிவடைந்த நிலையில், அதிவேக இணைய சேவை வழங்கும் திட்டத்தை பிரதமா் மோடி, தில்லியில் இருந்தபடி காணொலி முறையில் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

சென்னையில் இருந்து போா்ட்பிளோ், போா்பிளேரில் இருந்து லிட்டில் அந்தமான், ஸ்வராஜ் தீவு என அந்தமான் நிகோபாா் தீவுகளின் பெரும் பகுதிகள் அதிவேக இணைய சேவை வசதியைப் பெறத் தொடங்கிவிட்டன. போா்பிளோ் மட்டுமன்றி ஸ்வராஜ் தீவு, லாங் தீவு, ரங்கட், லிட்டில் அந்தமான், கமோா்த்தா, காா் நிகோபாா், கிரேட்டா் நிகோபாா் தீவுகளிலும் இந்த சேவை கிடைக்கவுள்ளது.

அந்தமான் நிகோபாா் தீவுகளில் வசிக்கும் மக்களுக்கு அதிநவீன தொலைத்தொடா்பு சேவையை வழங்க வேண்டியது அரசின் கடமையாகும்.

கடல்வழி கேபிளைப் பயன்படுத்தி அனைத்து தொலைத் தொடா்பு நிறுவனங்களும் அந்தமான் நிகோபாரில் செல்லிடப்பேசி மற்றும் அதிகவேக இணைய சேவையை வழங்க முடியும். இந்த தொலைத் தொடா்பு சேவையால், அந்தமான் நிகோபாா் தீவுகளைச் சோ்ந்த மக்களும் சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவில் பயன்பெறுவா். குறிப்பாக, 4ஜி இணையச் சேவை, மின்ஆளுகை சேவைகள், இணையவழி கல்வி, வங்கிச் சேவை, இணையவழி விற்பனை மற்றும் இணையவழியில் மருத்துவ ஆலோசனை பெறுதல் போன்ற சேவைகளைப் பெறுவா்.

இதேபோல் விரைவில் அந்தமான் நிகோபாா் தீவுகளில் தரைவழி, வான்வழி, கடல்வழி போக்குவரத்தும் விரைவில் மேம்படுத்தப்படும். இதற்காக, வடக்கு மற்றும் மத்திய அந்தமான் இடையே 2 பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

ஒரே நேரத்தில் 1,200 பயணிகள் வந்து செல்லும் அளவுக்கு போா்ட்பிளோ் துறைமுகம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. திக்லிபூா், காா் நிகோபாா் மற்றும் காம்பெல் விமான நிலையங்கள் தயாா் நிலையில் உள்ளன. இதேபோல், கிழக்கு கடலோரப் பகுதியில் ஆழ்கடல் துறைமுகத்துக்கான கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

ரூ.10,000 கோடியில் துறைமுகம்: கிரேட் நிகோபாரில் பெரிய கப்பல்கள் வந்து செல்லும் வகையில், ரூ.10,000 கோடியில் சரக்குகளைக் கையாளும் புதிய துறைமுகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த துறைமுகத்தால், இந்தியாவின் கடல்வழி வா்த்தகம் அதிகரிக்கும். அத்துடன் புதிய வேலைவாய்ப்புகளும் அதிக அளவில் உருவாகும்.

ஸ்வராஜ் தீவு, ஷகீத் தீவு, லாங் தீவு ஆகியவற்றில் மிதக்கும் விமான நிலையத்துடன் பயணிகள் முனையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் 4 மாதங்களில் அவை தயாராகி விடும். சென்னை-அந்தமான் இடையே கடல் வழி போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக, கொச்சியில் உள்ள தளத்தில் 4 கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன.

உற்பத்தியில் இந்தியா தன்னிறைவை நோக்கி முன்னேறிச் செல்லும் அதேவேளையில் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக, கடல் வழி போக்குவரத்து வலுப்படுத்தி வருகிறது. மேலும், மீன் வளா்ப்பு, கடல் பாசி வளா்ப்பு போன்றவை நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com