சொத்துக்காக எலி விஷம் கொடுத்து சகோதரியைக் கொன்றவர்: கூகுள் தேடல் மூலம் சிக்கினார்

ஐஸ்க்ரீமில் எலி விஷம் கலந்து கொடுத்து 16 வயது சகோதரியைக் கொன்ற ஆட்டோமொபைல் மெக்கானிக்கான 22 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குடும்ப சொத்துக்காக எலி விஷம் கொடுத்து சகோதரியைக் கொன்ற இளைஞர்
குடும்ப சொத்துக்காக எலி விஷம் கொடுத்து சகோதரியைக் கொன்ற இளைஞர்

காசர்கோடு: ஐஸ்க்ரீமில் எலி விஷம் கலந்து கொடுத்து 16 வயது சகோதரியைக் கொன்ற ஆட்டோமொபைல் மெக்கானிக்கான 22 வயது இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தனது செல்லிடப்பேசி மூலம் கூகுளிலில் எலி விஷம் சாப்பிட்டால் பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் எந்த விதமான பாதிப்பு ஏற்படும் என்பதை தேடியதை வைத்து இளைஞர் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார்.

குடும்ப சொத்துக்காக தந்தை மற்றும் தாயையும் கொல்ல முயன்றதாகவும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

16 வயதான சகோதரி ஆன் மேரியை, அவரது 22 வயது சகோதரன் ஆல்பின் பென்னி, ஈவு இரக்கமற்ற மற்றும் மிருகத்தனமாக கொலை செய்திருப்பதாக வழக்கை விசாரித்து வரும் வெள்ளாரிகுண்டு காவல்நிலைய ஆய்வாளர் கே. பிரேம்சாதன் தெரிவித்துள்ளார்.

பலால் பஞ்சாயத்துக்கு உள்பட்ட அரின்கல்லு பகுதியைச் சேர்ந்த ஆல்பின், குடும்ப சொத்துக்காக தனது பெற்றோர் மற்றும் சகோதரியைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

மூன்று பேரையும் கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாட ஆல்பின் திட்டமிட்டார். ஆனால் அவர் பல முறை ஒத்திகைப்பார்த்து அரங்கேற்றிய நாடகம் அவ்வளவு சரியாக நடந்தேறவில்லை.

சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் கூறியிருப்பதாவது,  ஜூலை 30-ம் தேதி வியாழக்கிழமை, ஆல்பின் தனது தாய் மற்றும் சகோதரியிடம் தனக்காக ஐஸ்க்ரீம் செய்து தருமாறு கேட்டுள்ளார்.

பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு உயர்கல்வியில் சேர காத்திருந்த சகோதரி ஆன் மேரி, பர்பன் ஐஸ்க்ரீம் செய்ய முடிவு செய்து அதற்கான பொருள்களை வாங்கி வந்துள்ளார். தாயும் மகளும் சேர்ந்து இரண்டு பாத்திரங்களில் ஐஸ்க்ரீம் செய்துள்ளனர். ஒன்றை ஃப்ரீஸரில் வைத்துள்ளனர். மற்றொன்று குளிர்பதனப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது.

மாலை ஐஸ்க்ரீம் தயாரானதும் நால்வரும் சேர்ந்து ஐஸ்க்ரீமை சாப்பிட்டுள்ளனர். அன்று இரவு ஆல்பின் எலி விஷத்தை குளிர்பதனப்பெட்டியில் மற்றொரு பாத்திரத்தில் இருந்த ஐஸ்க்ரீமில் கலந்துள்ளார்.

மறுநாள் மாலை எலி விஷம் கலந்த ஐஸ்க்ரீமை ஆன் மேரியும், அவரது தந்தை பென்னி ஒலிக்கல்லும் சாப்பிட்டுள்ளனர். அப்போது ஆல்பின் தனது தொண்டை வலிப்பதாகக் கூறி ஐஸ்க்ரீமை சாப்பிடாமல் தவிர்த்துள்ளார். ஐஸ்க்ரீமின் சுவை சரியாக இல்லை என்று கூறி தாய் பெஸ்ஸி சாப்பிடாமல், அதை நாய்க்குப் போட்டுள்ளார்.

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஆன் மேரிக்கு வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது. வெள்ளாரிக்குண்டு மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றார் தந்தை. அங்கு நடத்தப்பட்ட பல்வேறு சோதனைகளில் ஆகஸ்ட் 4ம் தேதி அவருக்கு மஞ்சள் காமாலை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். உடனடியாக மாற்று மருத்துவத்தை நாட குடும்பத்தினர் முடிவு செய்து கன்னூர் மாவட்டத்துக்கு ஆன் மேரி அழைத்து வரப்பட்டார். அங்கு அவரது உடல்நிலை மோசமாக ஆகஸ்ட் 5-ம் தேதி அவர் மரணம் அடைந்துவிட்டார். 

அப்போதே ஆன் மேரியின் தந்தைக்கும் இதே உடல்நலப் பிரச்னை ஏற்பட்டு கோழிக்கோடுவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், ஆன் மேரியின் இறப்பை சந்தேகத்துக்குரிய மரணமாக காவல்துறையினர் பதிவு செய்தனர்.

இதற்கிடையே தந்தை பென்னியின் கல்லீரல் 80% சேதமடைந்துவிட்டதாகவும், அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

ஆன் மேரியின் உடற்கூராய்வில், அவரது உடலில் எலி விஷம் இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர். அப்போதுதான் விசாரணை தீவிரம் பிடித்தது. ஆல்பினின் செல்லிடப்பேசியை கைப்பற்றிய காவல்துறையினர், கூகுளில், எலி விஷம் எவ்வாறு வேலை செய்யும் என்பதை தேடியிருப்பது தெரிய வந்தது.

உடனடியாக ஆல்பின் வசித்து வந்த பகுதியில் உள்ள கடைகளுக்குச் சென்று விசாரணை நடத்தியதில், ஜூலை 29-ம் தேதி ஆல்பின் எலி விஷம் வாங்கிச் சென்றதை கடைக்காரர் தெரிவிக்க, அதன்பிறகுதான் தங்கையிடம் அவர் ஐஸ்க்ரீம் செய்யுமாறு கேட்டதாக ஆய்வாளர் பிரேம்சாதன் தெரிவித்துள்ளார்.

பிறகு நடத்தப்பட்ட விசாரணையில், படித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் இருந்த ஆல்பின், தான் நினைத்தது போன்ற வாழ்க்கையை வாழ பெற்றோர் மற்றும் சகோதரி தடையாக இருப்பார்கள் என்றும், தந்தையின் மிகப்பெரிய பண்ணை, விவசாய நிலங்களை அடைய வேண்டும் என்பதற்காகவும் அவர்களைக் கொலை செய்ய திட்டமிட்டது தெரிய வந்தது.

ஏற்கனவே அவர் கோழிக்கறியில் எலி விஷத்தைக் கலந்து கொடுத்து குடும்பத்தாரைக் கொல்ல நடத்திய முயற்சி பலனளிக்காததால், கூகுள் மூலம் அறிந்து கொண்டு அதிக எலி விஷத்தைக் கலந்து கொடுத்து சகோதரியைக் கொன்றிருக்கிறார் என்றும் காவலர்களின் விசாரணையில் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com