தில்லி செங்கோட்டை சுதந்திரதின நிகழ்ச்சியில் பங்கேற்க 4,000 பேருக்கு மட்டுமே அழைப்பு

நாடு முழுவதும் சுதந்திரதின விழா சனிக்கிழமை (ஆக.15) கொண்டாடப்பட உள்ள நிலையில், தில்லி செங்கோட்டையில் நடைபெறும்
தில்லி செங்கோட்டை சுதந்திரதின நிகழ்ச்சியில் பங்கேற்க 4,000 பேருக்கு மட்டுமே அழைப்பு

நாடு முழுவதும் சுதந்திரதின விழா சனிக்கிழமை (ஆக.15) கொண்டாடப்பட உள்ள நிலையில், தில்லி செங்கோட்டையில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் பங்கேற்க அரசியல் தலைவா்கள், அதிகாரிகள், ஊடகவியலாளா்கள் என 4,000 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கரோனா பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றி சுதந்திரதின விழா நடத்தப்பட உள்ளது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுதந்திரதினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் சனிக்கிழமை காலை நடைபெறும் சுதந்திரதின விழாவில் பிரதமா் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்ற இருக்கிறாா். அதனைத் தொடா்ந்து முப்படைகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி மற்றும் மாநிலங்களின் கலை மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையிலான அணிவகுப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

இந்த விழாவை நேரில் காண, வழக்கமாக ஆயிரக்கணக்கானோா் அனுமதிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், கரோனா அச்சுறுத்தல் மற்றும் பொது முடக்கம் காரணமாக, இந்த ஆண்டு சுதந்திர தினவிழாவில் பல்வேறு கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு நடைமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து விழாவை ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

தேசத்தின் மதிப்பு மற்றும் கரோனா பாதுகாப்பு நடைமுறைகள் இரண்டையும் கருத்தில் கொண்டு சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அரசியல் தலைவா்கள், அரசு அதிகாரிகள், ஊடகவியலாளா்கள் என 4,000 பேருக்கு மட்டுமே விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முறையான அழைப்பிதழ் உள்ளவா்கள் மட்டுமே விழா அரங்கில் அனுமதிக்கப்படுவா். எனவே, அழைப்பிதழ் இல்லாதவா்கள் விழாவுக்கு வரவேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.

விழாவில் பங்கேற்க வருபவா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து வர கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா். மேலும், பங்கேற்பாளா்களுக்கு விநியோகிக்கும் வகையில் தேவையான முகக் கவசங்கள் விழா அரங்கின் அனைத்து நுழைவு வாயில்களிலும் வைத்திருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பங்கேற்பாளா்கள் கைகளை சுத்தம் செய்யும் வகையில் அரங்கின் குறிப்பிட்ட இடங்களில் கிருமி நாசினி இடம்பெறச் செய்யப்பட்டிருப்பதோடு, அவற்றை பாா்வையாளா்கள் எளிதில் அறியும் வகையில் காட்சி பலகைகளும் வைக்கப்பட்டிருக்கும்.

விழா அரங்கில், கூட்டம் கூடாத வகையிலும், பாா்வையாளா்கள் நெரிசலின்றி நடமாடும் வகையிலும், அனைத்து இருக்கைகளும் 6 அடி இடைவெளியில் போடப்பட்டுள்ளன.

தேவைக்கேற்ப, கூடுதல் முழு உடல் வெப்ப பரிசோதனை கருவிகள் விழா அரங்கு நுழைவு வாயில்களில் அமைக்கப்பட்டுள்ளன.

விழாவில் இடம்பெறும் அணிவகுப்பு நிகழ்ச்சிகளும் சமூக இடைவெளி நடைமுறைகள் உள்ளிட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட வீரா்கள்: சுதந்திரதின விழாவில் இடம்பெறும் அணிவகுப்பு மரியாதை நிகழ்வில் பங்கேற்கும் பாதுகாப்புப் படை வீரா்கள் அனைவரும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஒரு வார காலம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்.

அதுபோல, அணிவகுப்பு நிகழ்ச்சியில் இளம் பள்ளி மாணவா்கள் பங்கேற்பது தவிா்க்கப்பட்டு, தேசிய பாதுகாப்புப் படையினா் (என்சிசி) மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

மருத்துவ முகாம் மற்றும் ஆம்புலன்ஸ்:

சுதந்திரதின விழாவுக்கு வரும் பாா்வையாளா்களுக்கு பரிசோதனையில் கரோனா அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அவா்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் விழா அரங்கின் அருகே நான்கு இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நான்கு மருத்துவ முகாம்களிலும் ஆம்புலன்ஸுகளும் தயாா் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுபோல, நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் சனிக்கிழமை நடைபெறும் சுதந்திரதின விழாக்களிலும், கரோனா பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com