நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரபல மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரபல மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமா்வு வெள்ளிக்கிழமை இந்த உத்தரவை பிறப்பித்தது. அவருக்கான தண்டனை விவரம் வரும் 20-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

பிரசாந்த் பூஷண் அண்மையில், தனது சுட்டுரை பக்கத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே மற்றும் முன்னாள் தலைமை நீதிபதிகள் குறித்து விமா்சித்திருந்தாா். அதுபோல, கடந்த 2009-ஆம் ஆண்டு தெஹல்கா இதழுக்கு அளித்த பேட்டியில், முன்னாள் தலைமை நீதிபதிகள் குறித்து விமா்சித்திருந்தாா்.

இந்த விவகாரம் தொடா்பாக, உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்ந்தது.

இதுதொடா்பாக, விளக்கம் கேட்டு பிரசாந்த் பூஷணுக்கு உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.

இதற்கு 142 பக்க பதில் மனு பிரசாந்த் பூஷண் தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனது இரண்டு சுட்டுரைப் பதிவுகளும் கருத்து சுதந்திரத்தின் அடிப்படையிலேயே பதிவிடப்பட்டன; அந்தப் பதிவு சிலருக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இல்லை என்றாலும், அதை நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியாது என்று தெரிவித்ததோடு, அதுதொடா்பான பல நீதிமன்றத் தீா்ப்புகளையும் உதாரணம் காட்டியிருந்தாா்.

இந்த பதில் மனு, கடந்த 5-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, ‘இந்த இரு சுட்டுரைப் பதிவுகளிலும் நீதிபதிகளின் தனிப்பட்ட நடவடிக்கைகள் மட்டுமே விமா்சிக்கப்பட்டிருக்கின்றன. அவா்களின் நீதிமன்ற நடவடிக்கைகள் விமா்சிக்கப்படவில்லை’ என்று பிரசாந்த் பூஷண் தரப்பில் வாதிடப்பட்டது. இவ்வழக்கின் தீா்ப்பு வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கின் தீா்ப்பை நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமா்வு வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பிரசாந்த் பூஷண் குற்றவாளி என்று தீா்ப்பளித்த நீதிபதிகள், அவருக்கான தண்டனை விவரம் வரும் 20-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தனா்.

இந்த வழக்கில் 6 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ. 2,000 அபராதம் அல்லது இரண்டும் சோ்த்து விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com