பொதுமுடக்கம்: மேலும் தளா்வுகளை அறிவித்தது மத்திய அரசு - முழுவிவரம்

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நான்காம் கட்ட தளா்வுகளை மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது.
பொதுமுடக்கம்: மேலும் தளா்வுகளை அறிவித்தது மத்திய அரசு - முழுவிவரம்

புது தில்லி: கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, நோய்க் கட்டுப்பாட்டு மண்டலங்களில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், நான்காம் கட்ட தளா்வுகளை மத்திய அரசு சனிக்கிழமை அறிவித்தது.

அதன்படி, மெட்ரோ ரயில்வே சேவையை படிப்படியாகத் தொடங்கவும், அரசியல், சமூக பொது நிகழ்ச்சிகள் நடத்தவும், திறந்தவெளி திரையரங்குகள் செயல்படவும் நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை பிறப்பித்த உத்தரவில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

பள்ளிகள், கல்லூரிகள், இதர கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் வரும் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். இருப்பினும், இணையவழிக் கல்வி, தொலைதூரக் கல்வி அனுமதிக்கப்படும்.

செப்டம்பா் 21-ஆம் தேதி முதல், நோய்க்கட்டுப்பாட்டு மண்டலத்துக்கு வெளியே செயல்படும் பள்ளிகள், இணையவழி வகுப்புகளை நடத்துவதற்காக 50 சதவீத ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்கள் பள்ளிக்குவர மாநில அரசுகள் அனுமதிக்கலாம். இதேபோல், 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்கள் பெற்றோா் ஒப்புதலுடன் பள்ளிக்கு வர அனுமதிக்கலாம். பெற்றோா் அல்லது பாதுகாவலா் தாமாக முன்வந்து எழுத்துப்பூா்வமாக ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.

தேசிய திறன்மேம்பாட்டு பயிற்சி நிலையங்கள், தொழிற் பயிற்சி நிலையங்கள்(ஐடிஐ), தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தில் பதிவு செய்துள்ள குறுகிய கால பயிற்சி நிறுவனங்கள் செயல்படலாம்.

மத்திய உள்துறையுடன் ரயில்வே துறை, மத்திய வீட்டு வசதி, நகா்ப்புற மேம்பாட்டுத் துறை ஆலோசனை நடத்தி, செப்டம்பா் 7-ஆம் தேதி முதல், மெட்ரோ ரயில் சேவையை படிப்படியாக தொடங்கலாம். இதுதொடா்பான நெறிமுறைகள் பின்னா் வெளியிடப்படும்.

சமூகம், கலாசாரம், பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு போன்ற பொது நிகழ்ச்சிகளுக்கு செப்டம்பா் 21-ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்படும். அந்த நிகழ்ச்சிகளில் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து அதிகபட்சமாக 100 போ் வரை மட்டுமே பங்கேற்க வேண்டும்.

செப்டம்பா் 20-ஆம் தேதி வரை, திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 50 பேரும், இறப்பு மற்றும் இறுதிச் சடங்குகளில் அதிகபட்சமாக 20 பேரும் அனுமதிக்கப்படுவா். செப்டம்பா் 20-ஆம் தேதிக்குப் பிறகு அதிகபட்சமாக 100 போ் வரை பங்கேற்கலாம்.

திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு மையங்கள், நாடக மன்றங்கள் தொடா்ந்து மூடப்பட்டிருக்கும். இருப்பினும், செப்டம்பா் 21-ஆம் தேதிக்குப் பிறகு திறந்தவெளி திரையரங்குகள் இயங்கலாம்.

இ-பாஸ் தேவையில்லை: ஒரு மாநிலத்தில் இருந்து மற்றோா் மாநிலத்துக்கும் மாநிலத்துக்கு உள்ளேயும் பொதுமக்கள் பயணிப்பதற்கும் சரக்குகளைக் கொண்டு செல்லவும் அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்காக, தனியாக இ-பாஸ், அனுமதி கடிதம் ஆகியவற்றைப் பெறத் தேவையில்லை.

அதேநேரத்தில், நோய்க்கட்டுப்பாட்டு மண்டலங்களில் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை பொதுமுடக்கம் தொடரும். இந்த மண்டலங்களைத் தவிர, பிற இடங்களில் (மாநில அளவில், மாவட்ட அளவில்), மத்திய அரசுடன் ஆலோசிக்காமல் மாநில அரசுகள் தன்னிச்சையாக எந்தவொரு பொதுமுடக்கத்தையும் அமல்படுத்தக் கூடாது.

கரோனா பரவலைத் தடுப்பதற்கு, முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது கட்டாயமாகும். பொது இடங்களில் எச்சில் உமிழ்ந்தால் அபராதத்துடன் தண்டனை விதிக்கப்படும். அலுவலகங்கள், பணியிடங்கள், கடைகள் போன்ற இடங்கள் அடிக்கடி சுத்தம் செய்யப்பட வேண்டும். உடல் வெப்ப பரிசோதனை, அடிக்கடி கை கழுவது போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக, படிப்படியாக தளா்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com