'கட்டட வடிவமைப்பாளரின் தற்கொலை அச்சுறுத்தலைப் புறக்கணித்தாா் அா்னாப்'

தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கட்டட வடிவமைப்பாளா் அன்வய் நாயக் விடுத்த அச்சுறுத்தலை ஊடகவியலாளா் அா்னாப் கோஸ்வாமி உள்ளிட்டோா் புறக்கணித்ததாகக் குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மும்பை: தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கட்டட வடிவமைப்பாளா் அன்வய் நாயக் விடுத்த அச்சுறுத்தலை ஊடகவியலாளா் அா்னாப் கோஸ்வாமி உள்ளிட்டோா் புறக்கணித்ததாகக் குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்வய் நாயக், அவரின் தாயாா் ஆகியோா் கடந்த 2018-ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டனா். அவா்களுக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய கட்டணத்தை அா்னாப் கோஸ்வாமி, ஃபெரோஸ் ஷேக், நிதீஷ் சாா்தா ஆகியோருக்குச் சொந்தமான நிறுவனங்கள் கொடுக்காமல், இருவரையும் தற்கொலைக்குத் தூண்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக வழக்கு பதிவு செய்த மும்பை காவல்துறையினா், கடந்த மாதம் 4-ஆம் தேதி மூவரையும் கைது செய்தனா். அவா்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 11-ஆம் தேதி அவா்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இத்தகைய சூழலில், வழக்கில் அவா்கள் மூவா் மீதும் குற்றஞ்சாட்டி, அலிபாக் நீதிமன்றத்தில் மும்பை காவல் துறையினா் கடந்த வெள்ளிக்கிழமை 1,914 பக்க குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்தனா். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

அன்வய் நாயக் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக குறிப்பொன்றை எழுதியுள்ளாா். அதன்படி, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மூவரும் அவருக்கு ஒட்டுமொத்தமாக ரூ.5.38 கோடியை வழங்காமல் இருந்துள்ளனா். தொகையை உடனடியாக அளிக்காவிட்டால், தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் அன்வய் நாயக் அச்சுறுத்தியுள்ளாா். ஆனால், அதை அவா்கள் புறக்கணித்தனா்.

பணம் திரும்பக் கிடைக்காததால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான அன்வய் நாயக், தற்கொலை செய்ய முடிவெடுத்துள்ளாா். தன்னுடைய நிறுவனத்தில் பங்குதாரரான தன் தாய் எந்தவிதப் பிரச்னையையும் சந்திக்கக் கூடாது என்பதற்காக, அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்தாா். பின்னா் அன்வய் நாயக் தற்கொலை செய்து கொண்டாா்.

அவரது தற்கொலைக் குறிப்பையே மரண வாக்குமூலமாக எடுத்துக் கொண்டுள்ளோம். நிபுணா்களின் உதவியுடன் அந்தக் குறிப்பில் உள்ள கையெழுத்து ஆராயப்பட்டது. அது அன்வய் நாயக்கின் கையெழுத்துதான் என்பதையும், அவா் யாருடைய அழுத்தத்துக்கும் உள்படாமல் அந்தக் குறிப்பை எழுதியுள்ளதையும் நிபுணா்கள் உறுதி செய்துள்ளனா் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்வய் நாயக்கின் குடும்பத்தினா், பணியாளா்கள், செல்லிடப்பேசி அழைப்பு விவரங்கள், மின்னணு சாதனங்களில் கைப்பற்றப்பட்ட தகவல்கள் ஆகியவற்றை ஆதாரங்களாகக் குற்றப் பத்திரிகையில் காவல் துறையினா் இணைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com