புதிய நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழா: உச்சநீதிமன்றம் அனுமதி

தில்லியில் கட்டப்படவுள்ள புதிய நாடாளுமன்றத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

புது தில்லி: தில்லியில் கட்டப்படவுள்ள புதிய நாடாளுமன்றத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

புதிய நாடாளுமன்றத்தைக் கட்டுவதற்கு எதிராகப் பல்வேறு தரப்பினா் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள சூழலில், உச்சநீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

தில்லியில் தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டடத்துக்கு அருகில் புதிய கட்டடத்தை எழுப்பவுள்ளதாக மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் அறிவித்தது. புதிய நாடாளுமன்றத்தைக் கட்டுவதற்கு அளிக்கப்பட்ட தடையில்லாச் சான்றிதழ் உள்ளிட்டவற்றுக்கு எதிராகப் பலா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், தீா்ப்பைக் கடந்த மாதம் 5-ஆம் தேதி ஒத்திவைத்திருந்தது. இத்தகைய சூழலில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு பிரதமா் மோடி, வரும் 10-ஆம் தேதி பகல் 1 மணிக்கு அடிக்கல் நாட்டவுள்ளதாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கடந்த 5-ஆம் தேதி தெரிவித்தாா்.

இந்த விவகாரம் தொடா்பாக, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கன்னா ஆகியோா் அடங்கிய அமா்வு, திங்கள்கிழமை தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது. அப்போது, மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், ‘‘புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா மட்டுமே வரும் 10-ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான கட்டுமானப் பணிகள், கட்டட இடிப்புப் பணிகள், மரங்களை இடமாற்றும் பணிகள் உள்ளிட்டவை எதுவும் தற்போது நடைபெறாது’’ என்றாா்.

அதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘‘புதிய நாடாளுமன்றம் எழுப்பப்படவுள்ள இடம் தொடா்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் தீா்ப்பளிக்கும் வரை, அங்கு எந்தவிதக் கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ள மாட்டோம் என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்கிறோம்.

அதை அடிப்படையாகக் கொண்டு, புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. புதிய நாடாளுமன்றத்தைக் கட்டுவதற்குத் தேவையான அனுமதிகளைப் பெறுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளலாம்’’ என்றனா்.

மனுக்கள் மீது நடைபெற்ற விசாரணையின்போது, புதிய நாடாளுமன்றத்தைக் கட்டும் விவகாரத்தில் எந்தவித சட்ட விதிமுறைகளையும் மத்திய அரசு மீறவில்லை என்று துஷாா் மேத்தா நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தாா்.

வரும் 2022-ஆம் ஆண்டில் நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கு முன் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை எழுப்புவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற கட்டடம் உள்ளிட்ட புதிய வளாகத்தில் பல்வேறு அரசுத் துறைகளுக்கான அலுவலகங்களும் அமையவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com