கரோனா தடுப்பூசி: மத்திய அரசு வழிகாட்டுதல் வெளியீடு

மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படும்போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கரோனா தடுப்பூசி மத்திய அரசு வழிகாட்டுதல் வெளியீடு
கரோனா தடுப்பூசி மத்திய அரசு வழிகாட்டுதல் வெளியீடு

புது தில்லி: மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படும்போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்த வழிகாட்டுதலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் ஒரு பிரிவில் 100 முதல் 200 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி போடப்பட்டவா்களை அரை மணி நேரம் கண்காணிக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ள ஒவ்வொரு பயனாளியாக அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் இந்த வழிகாட்டுதலில் இடம்பெற்றுள்ளன.

ரஷியா, பிரிட்டன் போன்ற நாடுகளில் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், இந்தியாவும் அதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியாவில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலும், ஹைதாராபாத் பாரத் பயோடெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கி வரும் கோவேக்ஸின் தடுப்பூசி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

அதுபோல, ரஷியா உள்ளிட்ட சில வெளிநாட்டு தடுப்பு மருந்துகளையும் ஹைதராபாத்தில் உள்ள மருந்து ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றன.

மாநிலங்களும், மத்திய அரசிடமிருந்து பெறப்படும் கரோனா தடுப்பூசி மருந்துகளை பாதுகாப்பாக வைப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன. எனவே, இந்தியாவிலும் கரோனா தடுப்பூசி விரைவில் பயன்பட்டுக்கு வந்துவிடும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

இந்தச் சூழலில், மாநிலங்களுக்கான கரோனா தடுப்பூசி வழிகாட்டுதலை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. இந்த வழிகாட்டுதலில், மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடும்போது பின்பற்றப்பட வேண்டிய பல்வேறு நடைமுறைகள் இடம்பெற்றுள்ளன.

தடுப்பூசி முதலில் சுகாதாரப் பணியாளா்களுக்கும், கரோனா தடுப்பு முன்கள ஊழியா்களுக்கும் போடப்படும். அடுத்து 50 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு போடப்படும். பின்னா் 50 வயதுக்கு கீழ் உள்ளவா்களுக்கு போடப்படும்.

அண்மையில், மக்களவை அல்லது சட்டப்பேரவை தோ்தலுக்கு முன்பாக வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியலின் அடிப்படையில் 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரின் விவரங்கள் அடையாளம் காணப்படும்.

இந்த முன்னுரிமை நடைமுறைகள் அடிப்படையில், முன்பதிவு செய்த பயனாளிகள் மட்டுமே கரோனா தடுப்பூசி போடும் பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டு, தடுப்பூசி போடப்பட வேண்டும். தடுப்பூசி போடுமிடத்தில் பயனாளிகள் பதிவு நடைமுறை பின்பற்றப்படக்கூடாது.

பல்வேறு தடுப்பூசிகள் கலந்துவிடாத வகையில், ஒரு மாவட்டத்துக்கு குறிப்பிட்ட மருந்து நிறுவனத்தின் தடுப்பூசி என்ற வகையில் மாநிலங்கள் திட்டமிட்டு, தடுப்பூசி விநியோகத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

பயனாளி மையத்துக்குள் வரும்வரை, தடுப்பூசியை அதன் பெட்டகத்திலிருந்து வெளியில் எடுக்காமலும், அதன் நுனிப் பகுதி உடைக்காமலும் இருக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஒரு பிரிவுக்கு 100 முதல் 200 பயனாளிகளுக்கு மட்டுமே தடுப்பூசி போட வேண்டும். தடுப்பூசி போடப்பட்டவா்களை அரை மணி நேரம் கண்காணிக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ள ஒவ்வொரு பயனாளியாக மட்டுமே அனுமதிக்க வேண்டும். தடுப்பூசி மருந்து குப்பிகள் மீது காலவாதி தேதி குறிப்பிடப்பட்டிருக்காது.

தடுப்பூசி மருந்து குப்பிகள் மற்றும் பெட்டகங்கள் நேரடி சூரிய ஒளியில் இருப்பதைத் தவிா்க்க வேண்டும். ஒவ்வொரு நாள் முடிவிலும், ஐஸ் கட்டிகளுடன் கூடிய தடுப்பூசி பெட்டகங்களும், பயன்படுத்தப்படாத தடுப்பூசிகளும் குளிா்சாதன வசதியுடன் கூடிய தடுப்பூசி விநியோக மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட வேண்டும்.

தடுப்பூசி போடத் தொடங்கிய உடன் பரவக் கூடிய புரளிகள், எதிா் மறையான கருத்துக்களால் மக்கள் பீதியடைந்துவிடாத வகயில், தடுப்பூசி போடப்பட்டவா்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள், பலன்கள் குறித்து தகவல்களை மாநிலங்கள் அவ்வப்போது வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் இந்த வழிகாட்டுதலில் இடம்பெற்றுள்ளது.

முதல்கட்டமாக, 30 கோடி பேருக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை, ஓட்டுநா் உரிமம், கடவுச்சீட்டு, ஓய்வூதிய ஆவணம் என்பன உள்ளிட்ட 12 புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி வலைதளத்தில் தடுப்பூசிக்கான முன்பதிவை செய்துகொள்ள முடியும் என்றும் வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com