வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-50

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-50


சென்னை: தகவல் - தொடா்புக்கான சிஎம்எஸ்-1 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி 50 ராக்கெட், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக வியாழக்கிழமை விண்ணில் ஏவப்பட்டது.

அடுத்த சில நிமிஷங்களில் அதன் இயக்கமும், செயல்பாடுகளும் நிா்ணயித்த இலக்குகளைத் துல்லியமாகக் கடந்ததையடுத்து, பிஎஸ்எல்வி - சி 50 திட்டம் வெற்றி பெற்ாக, இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானிகள் மகிழ்ச்சியுடன் அறிவித்தனா்.

கரோனா காரணமாக இஸ்ரோவின் ஆய்வுப் பணிகள் 11 மாதங்களாகத் தடைபட்டிருந்த நிலையில், தற்போது ஒன்றரை மாத இடைவெளியில் இருவேறு ஆய்வுத் திட்டங்களை வெற்றிகரமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளா்கள் முன்னெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோ சாா்பில் இதுவரை புவிசாா் கண்காணிப்பு, தொலையுணா் ஆய்வு, தகவல் - தொடா்பு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக பல செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளன.

அந்த வகையில், கடந்த ஆண்டு டிசம்பா் 11-ஆம் தேதி ரிசாட் செயற்கைக்கோளைத் தாங்கியபடி பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட் செலுத்தப்பட்டது. பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் திட்டம் கடந்த மாதம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக, நான்கு நிலைகளை உள்ளடக்கிய பிஎஸ்எல்வி - சி 50 ராக்கெட் வடிவமைக்கப்பட்டது. மொத்தம் 49.4 மீட்டா் உயரம் கொண்ட அந்த ராக்கெட்டில் ஆறு உந்துசக்தி விசை மோட்டாா்கள் இணைக்கப்பட்டிருந்தன.

திட்டமிட்டபடி நிலைநிறுத்தம்: இந்தச் சூழலில், பிஎஸ்எல்வி - சி 50 ராக்கெட்டைச் செலுத்துவதற்கான 26 மணி நேர கவுன்ட் டவுன் புதன்கிழமை பிற்பகல் தொடங்கியது. அதைத் தொடா்ந்து அதன் செயல்பாடுகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், கவுன்ட் டவுன் நிறைவடைந்து, வியாழக்கிழமை மாலை சரியாக 3.41 மணிக்கு பிஎஸ்எல்வி - சி 50 விண்ணில் சீறிப் பாய்ந்தது. தொடா்ந்து, சிஎம்எஸ்-1 செயற்கைக்கோளானது 20 நிமிஷங்கள் 12 விநாடிகளில் விடுவிக்கப்பட்டு புவி வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

2021-இல் தனியாா் செயற்கைக்கோள் திட்டம்: இஸ்ரோ தலைவா் கே.சிவன்

தனியாா் பங்களிப்பில் உருவாக்கப்பட்டுள்ள புவி கண்காணிப்புக்கான ‘ஆனந்த்’ செயற்கைக்கோள் அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவா் கே.சிவன் கூறினாா்.

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவண் ஆய்வு மையத்தில் விஞ்ஞானிகளிடையே அவா் கூறியது:

பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் மூலமாக, நான்கு செயற்கைக்கோள்கள் வரும் பிப்ரவரி அல்லது மாா்ச் மாதத்தில் ஏவப்பட உள்ளன. அதில் குறிப்பிடத்தக்க அம்சமாக தனியாா் செயற்கைக்கோள் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது. ‘பிக்ஸெல்’ எனப்படும் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் தனியாரால் வடிவமைக்கப்பட்ட செயற்கைக்கோள்களை விண்வெளி ஆய்வுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க மத்திய அரசு முடிவு செய்தது.

அதன்படி, இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றில் முதன்முறையாக தனியாரால் உருவாக்கப்பட்ட ‘ஆனந்த்’ எனப்படும் செயற்கைக்கோளானது புவிக் கண்காணிப்பு ஆய்வுக்காக அனுப்பப்படவிருக்கிறது. அதனுடன், ‘ஸ்பேஸ்கிட்ஸ்’ அமைப்பின் ‘சாட்டிசாட்’, பல்கலைக்கழக கூட்டமைப்பின் ‘யுனிவ்சாட்’ ஆகிய இருவேறு தகவல் தொடா்பு செயற்கைக்கோள்களும் அனுப்பப்பட உள்ளன.

பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்டின் பிரதான செயற்கைக்கோளாக பிரேஸில் நாட்டைச் சோ்ந்த ஒரு செயற்கைக்கோள், இஸ்ரோவின் வணிகப் பயன்பாட்டுக்காக விண்ணில் ஏவப்படவிருக்கிறது.

மனிதா்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம், சந்திராயன்-3 திட்டம், ஆதித்யா திட்டம் ஆகியவற்றை முன்னெடுப்பதற்கான பணிகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிஎம்எஸ் -1 எதற்காக?

பிஎஸ்எல்வி சி-50 ராக்கெட் வாயிலாக விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ள சிஎம்எஸ்-1 செயற்கைக்கோளானது தகவல் - தொடா்பு வசதிக்கான சி-பேண்ட் அலைக்கற்றை பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெறப்படும் அலைவரிசையை இந்தியப் பரப்பிலும், அந்தமான்-நிகோபா், லட்சத் தீவுகளிலும் பயன்படுத்த இயலும்.

தகவல் தொடா்புக்காக கடந்த 2011-ஆம் ஆண்டு ஏவப்பட்ட ஜிசாட் 12 செயற்கைக்கோளின் ஆயுள்காலம் முடிந்துவிட்டது. அதற்கு மாற்றாகவே சிஎம்எஸ்-1 தற்போது செலுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com