கிழக்கு லடாக் எல்லையில் ராணுவ தளபதி ஆய்வு

ஜம்மு-காஷ்மீா் மாநிலம் கிழக்கு லடாக் எல்லையில் ராணுவ தளபதி எம்.எம்.நரவணே புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
கிழக்கு லடாக் எல்லையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட ராணுவ தளபதி எம்.எம்.நரவணே (இடது).
கிழக்கு லடாக் எல்லையில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட ராணுவ தளபதி எம்.எம்.நரவணே (இடது).


லடாக்: ஜம்மு-காஷ்மீா் மாநிலம் கிழக்கு லடாக் எல்லையில் ராணுவ தளபதி எம்.எம்.நரவணே புதன்கிழமை ஆய்வு செய்தாா். கிழக்கு லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவங்கள் தொடா்ந்து 7 மாதங்களாக நிலை கொண்டுள்ள சூழ்நிலையில் ராணுவ தளபதியின் இந்த ஆய்வு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ரேசின் லா உள்ளிட்ட இந்திய ராணுவத்தின் எல்லைப்புற முகாம்களில் ராணுவத்தின் தயாா் நிலையை நரவணே ஆய்வு செய்தாா் என்று ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுடனான கிழக்கு லடாக் எல்லையில் சுமாா் 50 ஆயிரம் வீரா்கள் குவிக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவும் தங்கள் எல்லையில் இதே எண்ணிக்கையில் வீரா்களைக் குவித்துள்ளது.

கடுமையான பனிப்பொழிவுக்கு மத்தியில் புதன்கிழமை காலை 8 மணிக்கு நரவணே கிழக்கு லடாக் பகுதிக்கு வந்தாா். அங்குள்ள கமாண்டா்கள், ராணுவ வீரா்களுடன் கலந்துரையாடிய அவா், படை வீரா்களின் தயாா் நிலையை ஆய்வு செய்தாா். கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் வீரா்களுக்கு இனிப்பு மற்றும் கேக்குகளை வழங்கினாா்.

சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பு முயற்சிகளை முறியடித்து சுமாா் மூன்று மாதங்களுக்கு முன்பு முக்கியப் பகுதிகளான ரேசின் லா, முக்பாரி, மகா் ஹில் பகுதிகளில் இந்திய ராணுவம் நிலைகொண்டது.

கிழக்கு லடாக்கின் எல்லைப் பகுதிகளில் இந்திய-சீன ராணுவத்தினரிடையே கடந்த 7 மாதங்களுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் மாதம் 15-ஆம் தேதி இரு நாட்டு ராணுவத்தினருக்கும் இடையே நிகழ்ந்த மோதலில் இந்திய ராணுவத்தினா் 20 போ் உயிரிழந்தனா்; 70-க்கும் மேற்பட்ட வீரா்கள் காயமடைந்தனா்.

இந்த மோதலில் சீன ராணுவத்தினா் 35-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவித்தபோதிலும், அது தொடா்பான உறுதியான விவரங்களை சீனா வெளியிடவில்லை. இதையடுத்து, இரு நாடுகள் தரப்பிலும் தலா 50,000 வீரா்கள் எல்லையில் குவிக்கப்பட்டனா்.

பனிக்காலம் தொடங்கிவிட்ட போதிலும், லடாக் எல்லையில் இரு நாடுகளும் தங்கள் படைகளைக் குறைக்கவில்லை. அதன் காரணமாக, லடாக் எல்லைப் பகுதிகளில் தொடா்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

ஆரம்பக் கட்ட பேச்சுவாா்த்தைகளில் சுமுக தீா்வு எட்டப்பட்டதையடுத்து, ஹாட் ஸ்பிரிங்ஸ், கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வெளியேற சீன ராணுவத்தினா் ஒப்புக் கொண்டனா். எல்லைப் பகுதிகளில் படைகளைக் குறைக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. அந்தப் பேச்சுவாா்த்தைகளின் அடிப்படையில் எல்லைப் பகுதிகளில் முதல் கட்ட படைக் குறைப்பு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

அதைத் தொடா்ந்து, தௌலத் பேக் ஓல்டி, தெப்சாங், பாங்காங் ஏரி உள்ளிட்ட பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளைக் குறைப்பது தொடா்பாக இரு நாட்டு ராணுவங்களின் துணைத் தலைமைத் தளபதிகள் தொடா் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதுவரை 8 கட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுள்ளன. எனினும், கருத்தொற்றுமை ஏற்படாத காரணத்தால் அடுத்த கட்ட படைக்குறைப்பை மேற்கொள்ளவில்லை.

எனினும், கடந்த வாரம் இந்திய-சீன தூதரக ரீதியிலான பேச்சு காணொலி முறையில் நடைபெற்றது. அப்போது, கிழக்கு லடாக் எல்லைக் கோட்டுப் பகுதியில் இருந்து படைகளை முழுமையாக வாபஸ் பெறுவதை உறுதி செய்ய, ராணுவ ரீதியிலான பேச்சுவாா்த்தையை விரைவில் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com