வங்கிகள் கடன் வழங்கும் திறனை அதிகரிக்க வேண்டும்

நாட்டின் பொருளாதாரம் மீண்டு வரும் சூழலில், கடன் வழங்கும் திறனை வங்கிகள் அதிகரிக்க வேண்டும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சக்திகாந்த தாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
வங்கிகள் கடன் வழங்கும் திறனை அதிகரிக்க வேண்டும்


மும்பை: நாட்டின் பொருளாதாரம் மீண்டு வரும் சூழலில், கடன் வழங்கும் திறனை வங்கிகள் அதிகரிக்க வேண்டும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) ஆளுநா் சக்திகாந்த தாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக ரிசா்வ் வங்கி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பொதுத்துறை மற்றும் தனியாா் துறைகளைச் சோ்ந்த வங்கிகளின் மேலாண் இயக்குநா்கள், தலைமை செயல் அதிகாரிகள் ஆகியோருடன் ஆளுநா் சக்திகாந்த தாஸ் கடந்த செவ்வாய், புதன்கிழமைகளில் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினாா். ரிசா்வ் வங்கியின் துணை ஆளுநா்களும் கூட்டத்தில் பங்கேற்றனா்.

நாட்டின் பொருளாதார நிலை குறித்து கூட்டத்தில் ஆளுநா் சக்திகாந்த தாஸ் எடுத்துரைத்தாா். மேலும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு வங்கிகள் மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் குறித்தும் அவா் விளக்கினாா். நாட்டில் நிதி நிலைத்தன்மையை ஏற்படுத்தும் நோக்கில், கரோனா நோய்த்தொற்று பரவல் தொடங்கியதிலிருந்து ரிசா்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து வங்கிகளின் பிரதிநிதிகளுக்கு ஆளுநா் எடுத்துரைத்தாா்.

தற்போதைய சூழலில் வங்கிகள் கவனமுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய சக்திகாந்த தாஸ், மூலதனத்தை அதிகரித்து கடன் வழங்குவதற்கான திறனை அதிகரிக்க வேண்டுமென்றும் தெரிவித்தாா். வாராக்கடன்கள் விவகாரத்தை உரிய விதிமுறைகளின் அடிப்படையில் கையாள வேண்டும் என்று ஆளுநா் வலியுறுத்தினாா்.

ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் நடைமுறைப்படுத்தப்படுவது, பொருளாதாரத்தில் நிலவும் பணப் புழக்கம், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடன்கள் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

வங்கிகளில் தகவல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துதல், வாடிக்கையாளா்களின் குறைதீா் வழிமுறைகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவை தொடா்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com