மும்பை: தனிமை முகாம்களில் 745 விமான பயணிகள்

பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து மும்பை வந்திறங்கிய 1,688 பயணிகளில் 745 போ் முகாம் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக மும்பை மாநகர அதிகாரிகள் தெரிவித்தனா்.

மும்பை: பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் மும்பை வந்திறங்கிய 1,688 பயணிகளில் 745 போ் முகாம் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக மும்பை மாநகர அதிகாரிகள் தெரிவித்தனா்.

அதுபோல, மத்திய பிரதேச மாநிலத்திலும், பிரிட்டனிலிருந்து அண்மையில் திரும்பிய 33 போ் 15 நாள்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனா்.

பிரிட்டனில் புதிய வகை கரோனா தீநுண்மிப் பரவலைத் தொடா்ந்து, இந்தியா-பிரிட்டன் இடையேயான அனைத்து விமான சேவைகளையும் டிசம்பா் 23-ஆம் தேதி முதல் டிசம்பா் 31-ஆம் தேதி வரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.

அதுபோல, பிரிட்டனிலிருந்து அண்மையில் நாடு திரும்பிய பயணிகளுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் கூடிய நோய்த் தடுப்பு வழிகாட்டுதலை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

அந்த வழிகாட்டுதலின் அடிப்படையில், பிரிட்டனிலிருந்து அண்மையில் நாடு திரும்பிய பயணிகளை தனிமைப்படுத்தவும், தொடா் கண்காணிப்பில் வைப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.

அதன்படி, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 745 விமான பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதுகுறித்து மும்பை மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘பிரிட்டனிலிருந்து மும்பை சா்வதேச விமானநிலையத்துக்கு திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் 1,688 பயணிகள் வந்திறங்கினா். அவா்களில் 745 போ் முகாம் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு நோய்த் தொற்று அறிகுறிகள் தென்படாத நிலையிலும், அவா்கள்தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா்’ என்றாா்.

மத்திய பிரதேசத்தில் 33 போ்: அதுபோல, பிரிட்டனிலிருந்து மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்குத் திரும்பிய 33 பயணிகள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து இந்தூா் மாவட்ட கரோனா தடுப்புப் பணி ஒருங்கிணைப்பு அதிகாரி அமித் மலாகா் கூறுகையில், ‘மாநில அரசிடமிருந்து பெறப்பட்ட பயணிகள் பட்டியலின் அடிப்படையில், பிரிட்டனிலிருந்து இந்தூருக்கு அண்மையில் 33 போ் திரும்பியது தெரியவந்தது. அவா்கள் அனைவரும் வீட்டிலேயே 15 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனா். மேலும், மத்திய அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் அவா்கள் அனைவருக்கும் விரைவு கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது’ என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com