ரூ. 6,300 கோடி மோசடி வழக்கில் தொடர்புடைய 3 பேர் கைது

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து சீட்டு நிறுவனம் நடத்தியும்,
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து சீட்டு நிறுவனம் நடத்தியும், பணசுழற்சி (செயின் லிங்க்) முறையிலும் ரூ. 6,300 கோடிக்கு மேல் பண மோசடி செய்த விவகாரம் தொடர்பாக தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் சீட்டு நிறுவனம் நடத்தி மோசடி செய்ததாக 3 பேரை அமலாக்கப்பிரிவு இயக்குநரகம் புதன்கிழமை கைது செய்தது.  
ஹைதராபாத், விஜயவாடாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த அக்ரி கோல்ட் நிறுவனம், சுமார் 32 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ. 6,380 கோடிக்கும் மேல்  நிதி மோசடி செய்ததாக எழுந்த புகாரின்பேரில் இந்நிறுவனத்தின் மீது அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர். இந்நிறுவனத்தால், ஒடிஸô, தமிழகம், மகாராஷ்டிரம், அந்தமான்-நிக்கோபர் தீவுகள், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் பணசுழற்சி முறையிலான திட்டத்தின் மூலமாகவும் முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். 
இதையடுத்து அக்ரி கோல்டு குழும நிறுவனங்களின் பொறுப்பாளர்களாக செயல்பட்டு வந்த அவ்வா வெங்கடராம ராவ்,  அவ்வா வெங்கட எஸ்.நாராயண ராவ், அவ்வா ஹேமா சுந்தர வரபிரசாத் ஆகிய 3 நபர்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:  
 முதலீட்டாளர்களிடம் பணமோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக இவர்கள் மூவர் மீதும் பண மோசடி தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஹைதராபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 14 நாள்கள் அவர்கள் மூவரும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 
மேலும், விஜயவாடா, ஹைதராபாதில் உள்ள இந்நிறுவனத்தின் பொறுப்பாளர்கள் இல்லங்கள், அலுவலகங்கள் மற்றும் தணிக்கையாளர்களின் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையில், ரூ. 22 லட்சம் ரொக்கம், சொத்து ஆவணங்களுடன் டிஜிட்டல் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த மோசடியை அரங்கேற்றியதில், அக்ரி கோல்டு குழு நிறுவனத்தின் முக்கிய பொறுப்பாளர் அவ்வா வெங்கடராம ராவ் முக்கிய பங்கு வகிக்கிறார். ஏற்கெனவே, கோல்டு பாரஸ்ட் கூட்டு முதலீட்டுத் திட்டத்தில் நடைபெற்ற மோசடியிலும் இவர் முக்கிய பங்காற்றியுள்ளார். அந்தத் திட்டம் மூலம் வர்த்தகத்தின் பல்வேறு தந்திரங்களைக் கற்றுக் கொண்ட அவர், பின்னர் தனது கூட்டாளிகளின் துணையுடன் நன்கு திட்டமிடப்பட்ட சதித் திட்டத்தை தீட்டினார். 
அவ்வா வெங்கடராம ராவ் தனது 7 சகோதரர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை அமைத்து, வளர்ச்சியடைந்த மனைகளும், பண்ணை நிலங்களும் தங்கள் வசம் இருப்பதாக வாக்குறுதி அளித்து பொது மக்களிடமிருந்து வைப்புத்தொகையைச் சேகரிக்கத் தொடங்கினார். தங்களிடம் முதலீடு செய்தால், கூடுதல் லாபத்துடன் முதிர்ச்சி பெறும் காலத்தில் அதிக வருவாயை ஈட்ட முடியும் என இவர்கள் பொய்யாகக் கூறி முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்டனர். 
கூடுதல் கமிஷன் தருவதாகவும், பல்வேறு கவர்ச்சித் திட்டங்களைக் கூறியும் ஆயிரக்கணக்கான முகவர்களை இந்த பணியில் ஈடுபடுத்தினார். மொத்தம் 32,02,628 முதலீட்டாளர்களின் கணக்குகள் மூலம் ரூ. 6,380 கோடியை வசூலித்துள்ளனர். முடிவில், முதலீட்டாளர்களுக்கு இடங்களை தராமலும், அவர்களது வைப்புத்தொகையை திருப்பித் தராமலும் ஏமாற்றினர். 
இந்த குழு நாடு முழுவதும் இருந்து சட்டவிரோதமாக வைப்புத்தொகையைச் சேகரித்தது. இந்நிறுவனம் குறித்து ஆய்வு மேற்கொண்ட செஃபி கூறுகையில், அக்ரி கோல்டு நிறுவனம் கூட்டு முதலீட்டுத் திட்டத்தில் இயங்கி வரும் ஒரு நிறுவனம் என்பதால் முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்பட்ட வைப்புத்தொகையை அவர்களுக்குத் திருப்பித் தர வேண்டும் என்று உத்தரவிட்டது. 
செஃபியின் உத்தரவுகளை அலட்சியம் செய்த, அவ்வா வெங்கடராம ராவ் புதிதாக நிறுவனங்களை மீண்டும் தொடங்கி, கமிஷன் முகவர்களின் உதவியுடன் ரியல் எஸ்டேட் வணிகத்தின் பெயரால் புதிய நிறுவனங்களில் வைப்புத்தொகையை முதலீடு செய்தார். இதனால் இது பணசுழற்சி (செயின்லிங்க்) மோசடி திட்டமாக உருவெடுத்தது. 
இதனை அமலாக்கத்துறை விசாரணை நடத்தியபோது, குற்றம்சாட்டப்பட்ட அவ்வா வெங்கடராம ராவ், அனைத்து முதலீட்டாளர்களுக்கும் வழங்கத் தேவையான நிலங்களை வாங்கவில்லை என்றும்,  5.5 லட்சம் இடங்களை மட்டுமே அவர் வாங்கியுள்ளதாக தெரிய வந்துள்ளது. 
முதலீட்டாளர்களிடம் இருந்து பெறப்பட்ட தொகையை தனது குடும்பத்தினருக்கும், தனக்கு சொந்தமான தனியார் நிறுவனங்களிலும், வெளிநாடுகளிலும் அவ்வா வெங்கட ராமராவ் முதலீடு செய்துள்ளார். இவர் கேமன் தீவுகள் உள்ளிட்ட அந்நிய நாடுகளில் செய்துள்ள முதலீடுகள் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com