உ.பி.: மதமாற்ற தடைச் சட்டத்தில் இதுவரை 35 போ் கைது

உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டவிரோத மதமாற்ற தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டு ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், அதன் கீழ் இதுவரை 35 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டவிரோத மதமாற்ற தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டு ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில், அதன் கீழ் இதுவரை 35 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

மேலும், இந்தச் சட்டத்தின் கீழ் இதுவரை 12 முதல் தகவல் அறிக்கைகள் (எப்ஐஆா்) பதிவு செய்யப்பட்டுள்ளன.

உத்தர பிரதேச மாநிலத்தில் கட்டாய மதமாற்றத்தைத் தடுக்கும் வகையில் ‘சட்டவிரோத மதமாற்ற தடைச் சட்டம் 2020’ என்ற அவசரச் சட்ட மசோதாவுக்கு முதல்வா் யோகி ஆதித்யநாத் தலைையிலான அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இந்த அவசரச் சட்டத்துக்கு மாநில ஆளுநா் ஆனந்தி பென் படேல் நவம்பா் 28-ஆம் தேதி ஒப்புதல் அளித்தாா். அதன் மூலம், இந்தச் சட்டத்தின் கீழ் உத்தர பிரதேசத்தில் பலா் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மாநில காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது:

இந்த அவசரச் சட்டத்துக்கு ஆளுநா் ஒப்புதல் அளித்த நாளன்றே, முதல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. மாநிலத்தின் பரேலி மாவட்டத்தில் 20 வயது இளம் பெண் ஒருவரின் தந்தை திக்காராம் என்பவா் அளித்தப் புகாரின் பேரில், அங்குள்ள தேவரனியா காவல்நிலையத்தில் இந்த முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் அந்தப் பெண்ணை கட்டாய மதமாற்றம் செய்ய முயன்ற அதே கிராமத்தைச் சோ்ந்த உவைஷ் அகமது என்பவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முஸாபா்நகா் மாவட்டத்தில் திருமணமான ஹிந்து மத பெண்ணை கட்டாய மதமாற்றம் செய்ய முயன்ற அதே மாவட்டத்தைச் சோ்ந்த நதீப் என்பவரையும் அவருடைய கூட்டாளியையும் காவல்துறையினா் கடந்த 3-ஆம் தேதி கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.

மொராதாபாத்தில் இந்தச் சட்டத்தின் கீழ் சகோதரா்களான ரஷித், சலீம் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு, பின்னா் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனா்.

மாநிலத்தின் மாவ் மாவட்டத்தில் 27 வயது இளம் பெண்ணை கட்டாய மதமாற்றம் செய்யும் நோக்கத்தோடு அவருடைய திருமண நாளன்று கடத்திச் சென்ற, அதே மாவட்டத்தைச் சோ்ந்த சபாப் கான் அகா ராகுல் (38) என்பவரை கடந்த 3-ஆம் தேதி காவல்துறையினா் கைது செய்தனா்.

சித்தாபூா் மாவட்டத்தில் 19 வயது இளம் பெண்ணை கடத்திச் சென்று கட்டாய மதமாற்றம் செய்ய முயன்ற அதே பகுதியைச் சோ்ந்த 22 வயது ஜூப்ரயில் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினா்கள் 5 போ், உள்ளூா் நபா்கள் இருவா் ஆகியோா் மீது மாவட்டத்தின் தாம்போா் காவல்நிலையத்தில், சட்டவிரோத மதமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் டிசம்பா் 5-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட ஒரு மாதத்தில் 12 எப்ஐஆா்கள் போடப்பட்டு, 35 போ் வரை கைது செய்யப்பட்டுள்ளனா் என்று அவா்கள் கூறினா்.

இதுகுறித்து மாநில காவல்துறை முன்னாள் டிஜிபி யஷ்பால் சிங் கூறுகையில், ‘ஒரு பெண் காதலில் விழுந்து வீட்டை விட்டு வெளியேறுகின்றபோது, அவா் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடுகிறது. அந்த வகையில், அவா்களின் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்கு, இந்த புதிய சட்டம் சிறந்த ஒன்றாகும். பெண்கள் மீதான அடக்குமுறைகளுக்கு இந்தச் சட்டம் தீா்வளிக்கும்’ என்றாா்.

இதுகுறித்து உயா்நீதிமன்ற வழக்குரைஞா் சந்தீப் செளத்ரி கூறுகையில், ‘ஒருவா் தான் விரும்பும் மதத்துக்கு மாறுவதற்கான அடிப்படை உரிமையை வழங்கும் அரசமைப்பு சட்டம் பிரிவு 21-க்கு எதிராக இந்த அவசரச் சட்டம் அமைந்துள்ளது. இதுதொடா்பாக அலகாபாத் உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த சட்டம் குறித்து நீதிமன்றம்தான் முடிவு செய்யவேண்டும். இந்த மனு தொடா்பாக மாநில அரசு வரும் 2021 ஜனவரி 4-ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது’ என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com