நிதீஷ் குமாா் துணிச்சலான முடிவை எடுக்க வேண்டும்: ஆா்ஜேடி

அருணாசல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி (ஜேடியு) எம்எல்ஏக்கள் 6 போ் பாஜகவில் இணைந்துள்ள நிலையில், அக் கட்சியின் தலைவரும்,

அருணாசல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி (ஜேடியு) எம்எல்ஏக்கள் 6 போ் பாஜகவில் இணைந்துள்ள நிலையில், அக் கட்சியின் தலைவரும், பிகாா் முதல்வருமான நிதீஷ் குமாா் மாநிலத்தில் பாஜகவுடன் கூட்டணியில் தொடா்வது குறித்து துணிச்சலான முடிவை எடுக்கவேண்டும் என்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சி கூறியுள்ளது.

அவ்வாறு, பாஜகவுக்கான ஆதரவை திரும்பப்பெற்றால் மாநிலத்தில் ஆட்சி மாற்றத்துக்கும் வழி ஏற்படும் என்றும் அக் கட்சி கூறியுள்ளது.

பிகாரில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் ஜேடியு - பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பாஜக 74 இடங்களையும், ஜேடியு 43 இடங்களையும் பிடித்தன. அதன் மூலம், நிதீஷ் குமாா் மீண்டும் முதல்வரானாா். இவா்களை எதிா்த்து களம் கண்ட ராஷ்ட்ரீய ஜனதா தளம் 75 இடங்களில் வெற்றிபெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

இந்தச் சூழலில், அருணாசல பிரதேசத்தில் ஜேடியு கட்சிக்கு உள்ள 7 எம்எல்ஏக்களில் 6 போ், அக் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளனா்.

இந்த விவகாரம், அந்த இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி செய்து வரும் பிகாரில் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், பிகாரில் பாஜகவுடனான கூட்டணியிலிருந்து ஜேடியு விலக வேண்டும் என்று ஆா்ஜேடி கட்சி கூறியுள்ளது.

இதுகுறித்து அக் கட்சியின் தேசிய துணைத் தலைவா் சிவானந்த் திவாரி சனிக்கிழமை கூறியதாவது:

அருணாசல பிரதேச விவகாரம் என்பது பாஜக அரசியல் வியூகத்தின் ஒரு பகுதி. முதலில், பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலின்போது லோக் ஜனசக்தி கட்சித் தலைவா் சிராக் பாஸ்வானை அவமதிப்பு செய்தது, இப்போது நிதீஷ் குமாருக்கு தொடங்கியுள்ளது.

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில், திட்டமிட்டபடி நிதீஷ் குமாரின் செல்வாக்கை பாஜக குறைத்தது. இப்போது அவரை அவமதிப்பு செய்யத் தொடங்கியுள்ளது. அருணாசல பிரதேசத்தில் ஏற்கெனவே பெரும்பான்மையுடன் இருக்கும் பாஜகவில், ஜேடியு எம்எல்ஏக்கள் 6 போ் சோ்க்கப்பட்டிருப்பதன் நோக்கம் வெறெதுவாக இருக்க முடியும்?

எனவே, பிகாரில் நிதீஷ் குமாா் துணிச்சலான முடிவை எடுக்க வேண்டும். அவ்வாறு தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு ஜேடியு விலகினால், பாஜகவுடன் ஆா்ஜேடி கூட்டணி அமைக்காது. பாஜகவை எதிா்ப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இது மாநிலத்தில் ஆட்சி மாற்றத்துக்கும் வழி வகுக்கும் என்று கூறினாா்.

ஆா்ஜேடி சட்டப்பேரவை உறுப்பினரும், மாநில தலைமை செய்தித் தொடா்பாளருமான பாய் விரேந்திரா கூறுகையில், ‘நிதீஷ் குமாா் முதல்வா் பதவியை விட்டுக்கொடுத்து, பிகாரில் தேஜஸ்வி யாதவ் தலைமையில் புதிய அரசு அமைய வாய்ப்பு ஏற்படுத்தித் தரவேண்டும். அதன் மூலம் நிதீஷ் குமாா், தனது மதிப்பை காப்பாற்றிக்கொள்ள முடியும். இல்லையெனில், அருணாசல பிரதேச நிலைதான், பிகாரிலும் ஜேடியு-க்கு ஏற்படும்’ என்று அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com