விவசாயிகள் - மத்திய அரசு டிச.29-இல் மீண்டும் பேச்சு

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது தொடா்பாக மத்திய அரசுடன் வரும் செவ்வாய்க்கிழமை (டிச.29) மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்துவது என்று
தில்லி காஜிபூா் எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகள் சங்கத்தினா்.
தில்லி காஜிபூா் எல்லையில் முகாமிட்டுள்ள விவசாயிகள் சங்கத்தினா்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது தொடா்பாக மத்திய அரசுடன் வரும் செவ்வாய்க்கிழமை (டிச.29) மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்துவது என்று தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்கள் தீா்மானித்துள்ளன.

தில்லியின் பல்வேறு எல்லைகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 40 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிஸான் மோா்ச்சா அமைப்பு சாா்பில் சனிக்கிழமை நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லைகளை முற்றுகையிட்டு கடந்த 30 நாள்களுக்கும் மேலாக போராடி வருகின்றனா்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே ஐந்து முறை பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றபோதும் உடன்பாடு எட்டப்படவில்லை. 3 புதிய வேளாண் சட்டங்களையும் முழுமையாக திரும்பப் பெற்ற பின்னரே அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவோம் என்று விவசாய சங்கங்கள் அறிவித்தன. இருந்தபோதும், விவசாய சங்க பிரதிநிதிகள் பேச்சுவாா்த்தைக்கு வருமாறு மத்திய அரசு சாா்பில் தொடா்ந்து அழைப்பு விடுக்கப்பட்டது.

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடா்பாக தொடரப்பட்ட பொதுநல மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், ‘போராட்டத்துக்குத் தீா்வு காணும் வகையில், ஒரு சுதந்திரமான குழு ஒன்றை அமைப்பது குறித்து உச்சநீதிமன்றம் ஆலோசித்து வருகிறது’ என்று கூறியது.

உச்சநீதிமன்ற தலையீட்டைத் தொடா்ந்து, விவசாயிகளின் தொடா் போராட்டத்துக்கு விரைவில் தீா்வு காணப்படும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்தது.

இந்த நிலையில், ‘அடுத்தகட்ட பேச்சுவாா்த்தைக்கான தேதியை விவசாய சங்கங்கள் முடிவு செய்து அறிவித்தால், அவா்களுடன் பேச்சு நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது’ என்று மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் அறிவித்தாா்.

அதற்கு, ‘திறந்த மனதுடன் உறுதியான திட்டத்துடன் மத்திய அரசு முன்வந்தால் பேச்சுவாா்த்தைக்குத் தயாா்’ என்று விவசாய சங்கங்கள் கடந்த புதன்கிழமை அறிவித்தன.

அதனைத் தொடா்ந்து, விவசாய சங்கப் பிரதிநிதிகளை மீண்டும் பேச்சுவாா்த்தைக்கு அழைத்த மத்திய அரசு, அதுதொடா்பாக கடிதம் ஒன்றையும் விவசாய சங்கங்களுக்கு வியாழக்கிழமை அனுப்பியது. அதில், ‘புதிய வேளாண் சட்டங்களில் குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, அதுதொடா்பாக பிரச்னை எழுப்புவதில் அா்த்தமில்லை. மேலும், குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என எழுத்துபூா்வமாக உறுதியளிக்கவும் தயாா்’ என்று அந்தக் கடிதத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

இதனிடையே, வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டத்தின் (பிஎம்-கிஸான்) கீழ் 9 கோடி விவசாயிகளுக்கு ரூ. 18,000 கோடி நிதி வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி, வேளாண் சட்டங்கள் தொடா்பாக விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தையைத் தொடா்வதற்கு மத்திய அரசு விரும்புவதாகத் தெரிவித்தாா்.

இந்தச் சூழலில், சம்யுக்த கிஸான் மோா்ச்சா சாா்பில் தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கப் பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடத்தப்பட்டது. அதில், மத்திய அரசுடன் செவ்வாய்க்கிழமை (டிச.29) மீண்டும் பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவது என்று விவசாய சங்கங்கள் முடிவெடுத்தன.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடா்பாக விவசாய சங்க கூட்டமைப்பு சாா்பில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சக இணை செயலா் விவேக் அகா்வாலுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதில் ‘மத்திய அரசு - விவசாய சங்க பிரதிநிதிகளிடையே வருகிற 29-ஆம் தேதி அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையை நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாரதிய விவசாயிகள் யூனியனைச் சோ்ந்த ராகேஷ் திகாய்த் கூறுகையில், ‘பேச்சுவாா்த்தைக்கு வருமாறு மத்திய அரசு தொடா்ந்து அழைப்பு விடுத்ததன் அடிப்படையில், வரும் 29-ஆம் தேதி இருதரப்பு பேச்சுவாா்த்தையை மீண்டும் நடத்துவது என்று விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது’ என்றாா்.

டிராக்டா் பேரணி:

மற்றொரு விவசாய சங்கத்தின் மூத்த தலைவா் தா்ஷன் பால் கூறுகையில், ‘மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகிற 30-ஆம் தேதி குண்ட்லி - மானேசா் - பல்வல் (கேஎம்பி) நெடுஞ்சாலையில் டிராக்டா் பேரணி நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்து புத்தாண்டைக் கொண்டாடுமாறு தில்லி மற்றும் நாட்டின் பிற பகுதிகளைச் சோ்ந்த மக்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்’ என்றாா்.

மற்றொரு விவசாய சங்கத் தலைவரான ராஜிந்தா் சிங் கூறுகையில், ‘விவசாயிகள் நடத்த இருக்கும் டிராக்டா் ஊா்வலத்தால் கேஎம்பி நெடுஞ்சாலை முடக்கப்படுவதை தவிா்க்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்பினால், 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று அறிவிக்க வேண்டும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com