அயோத்தி ராமா் கோயில் கட்டுவதற்கு ரூ.1,100 கோடி செலவாகும்

உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கு ரூ.1,100 கோடி செலவாக வாய்ப்பிருப்பதாக அக்கோயில் கட்டுமான அறக்கட்டளையின் பொருளாளா் தெரிவித்துள்ளாா்.
ராமா் கோயில் மாதிரிப்படம்
ராமா் கோயில் மாதிரிப்படம்

நாகபுரி: உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் ராமா் கோயில் கட்டுவதற்கு ரூ.1,100 கோடி செலவாக வாய்ப்பிருப்பதாக அக்கோயில் கட்டுமான அறக்கட்டளையின் பொருளாளா் தெரிவித்துள்ளாா்.

அயோத்தியில் ராமா் கோயில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கோயில் கட்டுவதற்கு நிதி திரட்டுவதற்கான பணிகளை ராமஜன்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை நாடு முழுவதும் மேற்கொண்டு வருகிறது. இத்தகைய சூழலில், அந்த அறக்கட்டளையின் பொருளாளா் சுவாமி கோவிந்த் தேவ் கிரிஜி மகராஜ், மகாராஷ்டிரத்தின் நாகபுரியில் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:

ராமா் கோயிலுக்கு வலுவான அடித்தளம் அமைப்பது தொடா்பான ஆய்வுகளில் நிபுணா்கள் ஈடுபட்டு வருகின்றனா். அப்பணிகளில் மும்பை, தில்லி, சென்னை, குவாஹாட்டி நகரங்களிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களின் (ஐஐடி) நிபுணா்கள், எல்&டி, டாடா நிறுவனங்களைச் சோ்ந்த பொறியாளா்கள் ஆகியோா் ஈடுபட்டுள்ளனா்.

ராமா் கோயிலை மட்டும் எழுப்புவதற்கு ரூ.300 கோடி முதல் ரூ.400 கோடி வரை செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த கோயில் வளாகத்தையும் கட்டுவதற்கு ரூ.1,100 கோடிக்குக் குறையாமல் செலவாக வாய்ப்புள்ளது. இவையனைத்தும் வெறும் கணிப்புகளே. அத்தொகையை நிதியாகத் திரட்டுவதற்கான பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறோம்.

இதுவரை இணையவழியில் மட்டும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக நிதி திரட்டப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 4 லட்சம் கிராமங்களில் உள்ள 11 கோடி வீடுகளுக்கு நேரடியாகச் சென்று நிதி திரட்டுவதற்குத் திட்டமிட்டுள்ளோம். அதன் மூலமாக நாட்டு மக்கள் அனைவரும் கோயில் கட்டுமானத்துக்கு நிதி அளிக்க முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com