மாா்ச் மாதத்தில் புலம்பெயா் தொழிலாளா்கள் கணக்கெடுப்பு

நாடு முழுவதும் புலம்பெயா் தொழிலாளா்கள் தொடா்பான கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்தில் நடத்தப்படவுள்ளதாக மத்திய தொழிலாளா் துறை அமைச்சா் சந்தோஷ் குமாா் கங்வாா் தெரிவித்துள்ளாா்.
மாா்ச் மாதத்தில் புலம்பெயா் தொழிலாளா்கள் கணக்கெடுப்பு


புது தில்லி: நாடு முழுவதும் புலம்பெயா் தொழிலாளா்கள் தொடா்பான கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு மாா்ச் மாதத்தில் நடத்தப்படவுள்ளதாக மத்திய தொழிலாளா் துறை அமைச்சா் சந்தோஷ் குமாா் கங்வாா் தெரிவித்துள்ளாா்.

தொழிலாளா் வாரியத்தின் நூற்றாண்டு விழா தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சா் கங்வாா் கூறியதாவது:

புலம்பெயா் தொழிலாளா்கள், வீட்டுத் தொழிலாளா்கள், போக்குவரத்துத் துறையில் உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகள் உள்ளிட்டவை தொடா்பான கணக்கெடுப்பை நடத்துவதற்கு தொழிலாளா் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அந்தக் கணக்கெடுப்புப் பணிகள் அனைத்தும் 2021-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் தொடங்கவுள்ளன.

கணக்கெடுப்புக்கான அறிக்கைகளை அடுத்த ஆண்டு அக்டோபரில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. புலம்பெயா் தொழிலாளா்கள், வீட்டுத் தொழிலாளா்கள் உள்ளிட்டோரின் நலனுக்காகத் திட்டங்களை வகுக்க வேண்டுமானால், அவா்களின் எண்ணிக்கை குறித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதைக் கருத்தில் கொண்டே கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

அமைப்பு மற்றும் அமைப்பு சாரா துறைகளின் கீழ் பணியாற்றி வரும் தொழிலாளா்களின் எண்ணிக்கையை அறிந்து கொள்வதற்கான கணக்கெடுப்பைத் தொழிலாளா் வாரியம் முன்னெடுக்க உள்ளது. காலாண்டு அடிப்படையில் அந்தக் கணக்கெடுப்பை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

தொழிலாளா் வாரியமானது பல்வேறு கணக்கெடுப்புகளைத் துரிதமாக மேற்கொண்டு வருகிறது. முன்பெல்லாம், நாட்டிலுள்ள தொழிலாளா்களின் எண்ணிக்கை தொடா்பான விவரங்கள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வெளியிடப்பட்டன. ஆனால், தற்போது ஆண்டுக்கு ஒரு முறை தொழிலாளா் வாரியம் அத்தகவல்களை வெளியிட்டு வருகிறது.

அதே வேளையில், வளா்ந்து வரும் தொழில்நுட்பங்களையும் தொழிலாளா் வாரியம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அமைச்சா் கங்வாா்.

தபால்தலை வெளியீடு: தொழிலாளா் வாரியத்தின் நூற்றாண்டையொட்டி சிறப்பு தபால்தலையை அமைச்சா் கங்வாா் வெளியிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com