ஆகாஷ் ஏவுகணை ஏற்றுமதிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஆகாஷ் ஏவுகணையை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உள்நாட்டில் பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தியை
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஆகாஷ் ஏவுகணையை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உள்நாட்டில் பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 
இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை தரையில் இருந்து வானில் 25 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை 96% உள்நாட்டு உபகரணங்களால் தயாரிக்கப்பட்டது. 
சர்வதேச கண்காட்சிகளில் இந்த ஏவுகணைகள் காட்சிப்படுத்தப்பட்டன. அதனைத்தொடர்ந்து இந்த ஏவுகணைகளை வாங்குவதற்கு பல நட்பு நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளன. 
பிரதமர் மோடி தலைமையில் புதன்கிழமை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில் இந்த ஏவுகணைகளை ஏற்றுமதி செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. முக்கிய பாதுகாப்புத் தளவாடங்களை ஏற்றுமதி செய்வதற்கு ஒப்புதல் அளிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
"பல்வேறு விதமான பாதுகாப்புத் தளவாடங்கள் மற்றும் ஏவுகணைகள் உற்பத்தித் திறனில் இந்தியா வளர்ச்சியடைந்து வருகிறது. முன்பு மிகப் பெரிய ராணுவத் தளவாடங்களை ஏற்றுமதி செய்வது குறைவாக இருந்தது. தற்போது ஆகாஷ் ஏவுகணையை ஏற்றுமதி செய்வதற்கு முடிவு செய்துள்ளது, உள்நாட்டில் தயாரிக்கப்படும் பாதுகாப்புத் தளவாடங்களின் திறனை மேம்படச் செய்வதற்கு உதவுவதுடன், அவற்றை சர்வதேச அளவில் போட்டியிட தகுதிவாய்ந்ததாக்கும். 5 பில்லியன் டாலர் (ரூ.36,594 கோடி) மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கை எட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது' என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com