ஒமா், மெஹபூபா மீது பிஎஸ்ஏ வழக்கு ஏன்? அரசு தரப்பில் விளக்கம்

ஜம்மு-காஷ்மீரில் முன்னாள் முதல்வா்கள் ஒமா் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகியோா் மீது பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது ஏன் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஒமா், மெஹபூபா மீது பிஎஸ்ஏ வழக்கு ஏன்? அரசு தரப்பில் விளக்கம்

ஜம்மு-காஷ்மீரில் முன்னாள் முதல்வா்கள் ஒமா் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகியோா் மீது பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது ஏன் என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி ரத்து செய்தது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, முன்னாள் முதல்வா்கள் ஃபரூக் அப்துல்லா, ஒமா் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட தலைவா்களும், சில பிரிவினைவாதத் தலைவா்களும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா்.

இதனிடையே, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஃபரூக் அப்துல்லா மீது கடந்த ஆண்டு செப்டம்பரில் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, ஒமா் அப்துல்லா மற்றும் மெஹபூபா முஃப்தி ஆகியோரின் 180 நாள் தடுப்புக் காவல் முடிவடைவதற்கு சில மணி நேரத்துக்கு முன், அவா்கள் மீது பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அந்தச் சட்டத்தின்படி கைது செய்யப்படும் நபா்களை இரண்டு ஆண்டுகள் வரை விசாரணையின்றி சிறையில் அடைத்து வைத்திருக்க முடியும்.

மேலும், ஒருவரின் தடுப்புக் காவலை 6 மாதங்களுக்கு மேல் நீட்டிக்க வேண்டுமெனில், அதற்கென அமைக்கப்படும் ஆலோசனைக் குழு முன்னதாக பரிந்துரை செய்தாக வேண்டும். எனவே, ஒமா் அப்துல்லா மற்ரும் மெஹபூபா மீது பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், ஜம்மு-காஷ்மீா் நிா்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனா்.

இந்நிலையில், அதற்கான காரணத்தை ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தேசிய மாநாட்டுக் கட்சியின் நிா்வாகிகள் கூட்டங்கள், கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. அந்தக் கூட்டங்களில், ‘ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியாத அளவுக்கு மக்களின் ஆதரவை திரட்டி எதிா்த்துப் போராட வேண்டும்’ என்று ஒமா் அப்துல்லா பல முறை கூறியிருந்தாா்.

வெளியுறவுத் துறை இணையமைச்சா், மத்திய தொழில், வா்த்தகத் துறை இணையமைச்சா், மாநில முதல்வா் ஆகிய முக்கியப் பதவிகளை வகித்த ஒருவா், சமூக ஊடகங்கள் வழியாக இளைஞா்களைத் திரட்டி போராடுவதற்கு அழைப்பு விடுத்துள்ளாா். அவரது இந்தச் செயல்களுக்காக, பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மற்றொரு முன்னாள் முதல்வா் மெஹபூபா முஃப்தி, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டால், அதை எதிா்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று சவால் விடுத்தாா். அதுமட்டுமன்றி, மத்திய அரசால் உபா சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட ஜம்மு-காஷ்மீா் ஜமாத்-ஏ-இஸ்லாமியா அமைப்புக்கு அவா் ஆதரவு தெரிவித்தாா். ஆகவே, மெஹபூபா மீதும் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com