வரி நிர்வாக பிரச்னைகளுக்கு உரிய முறையில் தீர்வு

வரி நிர்வாக பிரச்னைகளுக்கு உரிய முறையில் அரசு தீர்வு காணும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

வரி நிர்வாக பிரச்னைகளுக்கு உரிய முறையில் அரசு தீர்வு காணும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
 வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்கும் 2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் கடந்த வாரம் தாக்கல் செய்த அவர், ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா வந்தார். அங்கு தொழில் மற்றும் வர்த்தகத் துறை தலைவர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது, நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
 அலுவலர்கள் அல்லது முகவர்களின் உதவியின்றி வரி செலுத்துபவரே வரித்தொகையைக் கணக்கிடுவது உள்பட வரி செலுத்துவதில் உள்ள பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் சில விஷயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்ப உதவியுடன் இந்தப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முடியும்.
 தொழில் துறையினர் எவ்வித சிரமமுமின்றி வரி செலுத்துவதற்கு உதவியாக மத்திய அரசு இருக்கும். இதற்காக, தொழில் மற்றும் வர்த்தகத் துறை தலைவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருப்பதற்கு மத்திய அரசு விரும்புகிறது. ஜிஎஸ்டி வரி விகிதத்தைக் குறைப்பதில், மத்திய அரசுதான் நடவடிக்கையை தொடங்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. மாநில அரசுகளும் இதுதொடர்பாக விவாதிக்க முன்வர வேண்டும்.
 ரூ.350 லட்சம் கோடி இலக்கு: மக்களின் நுகர்வை அதிகரிப்பதற்கும், உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்காக முதலீடு செய்வதற்கும் மத்திய பட்ஜெட்டில் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அடித்தளமானது, நாட்டின் பொருளாதாரத்தை வரும் 2024-25-ஆம் ஆண்டுக்குள் ரூ.350 லட்சம் கோடியாக உயர்த்தும் இலக்கை அடைவதற்கு இட்டுச் செல்லும் என்றார் நிர்மலா சீதாராமன்.
 அதைத் தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் அஸ்ஸாமிலும் தேயிலைத் தோட்டங்கள் அதிகம் நிறைந்த பகுதிகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே ஏடிஎம் மையங்கள் இருப்பதாக, தேயிலை வாரியத் தலைவர் பி.கே.விஸ்வரூபா கூறினார். அதற்கு, ஏடிஎம் மையங்கள் மிகக் குறைவாக இருக்கும் இடங்களில் புதிய ஏடிஎம் மையங்கள் அமைப்பதற்கு அரசு தயாராகி வருகிறது என்றார் நிர்மலா சீதாராமன். அதைத் தொடர்ந்து, தொழில் மற்றும் வர்த்தகத் துறை வளர்ச்சிபெற வேண்டுமெனில், தொழில் மேம்பாட்டுக்காக அவர்கள் வாங்கும் கடனுதவி அதிகரிக்க வேண்டும் என்று நிதித் துறைச் செயலர் ராஜீவ் குமார் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com