அரியணை ஏறும் அரவிந்த் கேஜரிவால்: குவியும் வாழ்த்துகள்

தில்லி பேரவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ள அரவிந்த் கேஜரிவாலுக்கும், ஆம் ஆத்மிக்கும் நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
அரியணை ஏறும் அரவிந்த் கேஜரிவால்: குவியும் வாழ்த்துகள்


தில்லி பேரவைத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கவுள்ள அரவிந்த் கேஜரிவாலுக்கும், ஆம் ஆத்மிக்கும் நாடு முழுவதிலும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு கடந்த சனிக்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (செவ்வாய்கிழமை) காலை முதல் நடைபெற்று வருகிறது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த ஆம் ஆத்மி 63 தொகுதிகளில் முன்னிலை பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. தில்லியில் ஆட்சி அமைக்க 36 இடங்களே தேவை என்ற நிலையில் ஆம் ஆத்மி 63 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 7 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

ஆம் ஆத்மியின் இந்த அமோக வெற்றிக்கு நாடு முழுவதிலும் இருந்து எதிர்க்கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்:

இவர் டிவிட்டர் பதிவில் குறிப்பிடுகையில், "பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் வகுப்புவாத அரசியல் மற்றும் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிரான மக்களின் உணர்வாகவே தில்லி பேரவைத் தேர்தல் முடிவுகளைக் கருத வேண்டும். தில்லி தேர்தலின் மகத்தான வெற்றிக்கு அரவிந்த் கேஜரிவாலுக்கும், ஆம் ஆத்மிக்கும் வாழ்த்துகள். மக்கள் சார்ந்த மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய அரசியலுக்கு இந்த வெற்றி முன்னோடியாக இருக்கட்டும்" என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர்,

"தில்லி தேர்தலில் இருந்து காங்கிரஸ் கட்சி பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆம் ஆத்மியுடன் கைகோர்க்க அவர்கள் தயாராக இல்லை. பாஜகவின் மக்கள் விரோத கொள்கைக்கு மாற்றான அரசியலை வழங்குபவர்களையே மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர் என்ற நிதர்சனத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதுதான் தில்லியில் நடந்துள்ளது" என்றார்.

சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ்:

"தில்லியில் ஆம் ஆத்மி பெற்றுள்ள வெற்றி, இந்த நாட்டுக்கு தெளிவான செய்தியை அளிக்கிறது. பாஜகவின் கர்வத்துக்கு எதிராக தில்லி மக்கள் வாக்களித்துள்ளனர். அவர்கள் வளர்ச்சிக்காக வாக்களித்துள்ளனர். தேர்தலில் வகுப்புவாதத்தைத் திணிக்க பாஜக முடிந்த அளவுக்கு முயற்சிகளை மேற்கொண்டது. அவர்களது வெறுப்பு பிரசாரம் மிகுந்த பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளது" என்றார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி:

"குறுகிய எண்ணம் கொண்ட வெறுப்புணர்வு அரசியலுக்கு மத்தியிலும் தில்லி பேரவைத் தேர்தல் முடிவுகள் மக்களின் வெற்றியாக அமைந்துள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. வெறுப்பு அரசியல் இந்த முறை பலனளிக்கவில்லை. இது ஜனநாயகத்துக்குக் கிடைத்த வெற்றி. தில்லி மக்களுக்கு வாழ்த்துகள். 

தில்லியில் வலுக்கட்டாயமாக ஆட்சியைப் பிடிக்க தனது மொத்த வலிமையையும், அமைப்புகளையும் பாஜக பயன்படுத்தியது. இருந்தபோதிலும் அது தோல்வியையே சந்தித்துள்ளது. அனைத்து இடங்களிலும் பாஜக தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வருகிறது. 

பாஜகவின் வெறுக்கத்தக்க, பிரிவினைவாத அரசியலை மக்கள் விரும்பவில்லை. மக்களுக்கு வேலை, உணவு, உடை, தங்கும் இடம், வளர்ச்சி மற்றும் அமைதி ஆகியவைதான் தேவை. எனவே, அமைதிக்கும், வளர்ச்சிக்கும், நாட்டு மற்றும் மக்கள் நலனுக்காகவும்தான் அரசியல் இருக்க வேண்டும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com