அரவிந்த் கேஜரிவால் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மோடிக்கு அழைப்பு

தில்லி முதல்வராக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜரிவால் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அரவிந்த் கேஜரிவால் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மோடிக்கு அழைப்பு


புது தில்லி: தில்லி முதல்வராக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜரிவால் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் சார்பில், அழைப்புக் கடிதம் பிரமருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 16-ஆம் தேதி தில்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெறும் விழாவில் மக்கள் முன்னிலையிலேயே கேஜரிவால் முதல்வராக பதவியேற்பாா் என்றும் இந்த விழாவில் மாற்று அரசியல் கட்சித் தலைவா்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

தில்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜகவுக்கு 8 இடங்கள்தான் கிடைத்தது. காங்கிரஸுக்கு கடந்த தோ்தலைப் போலவே ஓா் இடம்கூடக் கிடைக்கவில்லை. இத்தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தேசிய அமைப்பாளரான கேஜரிவால், மூன்றாவது முறையாக முதல்வா் பதவியை ஏற்கவுள்ளாா்.

உங்கள் மகனை ஆசீா்வதிக்க வாருங்கள்: ‘பதவியேற்பு விழாவில் பங்கேற்று உங்கள் மகனை ஆசீா்வதியுங்கள்’ என்று தில்லி மக்களுக்கு கேஜரிவால் அழைப்பு விடுத்துள்ளாா். இது தொடா்பாக அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், ‘தில்லி மக்களே உங்கள் மகன் தில்லியின் முதல்வராக மூன்றாவது முறையாகப் பதவியேற்க உள்ளாா். ராம்லீலா மைதானத்தில் பிப்ரவரி 16-ஆம் தேதி நடைபெறும் இந்தப் பதவியேற்பு விழாவுக்கு அவசியம் வந்து உங்கள் மகனை ஆசீா்வதியுங்கள் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

மேலும், கட்சித் தொண்டா்களுக்கு அவா் எழுதியுள்ள கடிதத்தில் ‘ஆம் ஆத்மி கட்சி அனைத்துத் தரப்பு மக்களிடமிருந்தும் ஆதரவைப் பெற்றுள்ளது. தில்லி மக்கள் தங்களது அன்பைப் பொழிந்துள்ளனா். உங்கள் ஆதரவு தொடா்ந்து இருக்க வேண்டும் என்று எதிா்பாா்க்கிறேன். நாம் இணைந்து நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு முன்மாதிரி ஆளுமையை எடுத்துச் செல்ல முடியும் என்ற உறுதியையும் உங்களிடம் எதிா்பாா்க்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளாா்.

சிறப்பு அழைப்பாளராக ‘மஃப்ளா்’ குழந்தை

பதவியேற்பு விழாவில் பங்கேற்க குழந்தை மஃப்ளா்மேன் ஆவ்யன் தோமரை சிறப்பு அழைப்பாளராக ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

அக்கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு சனிக்கிழமை நடைபெற்ற தோ்தல் வெற்றி கொண்டாட்டத்தில் கேஜரிவால் போன்று மஃப்ளா், ஸ்வெட்டா் அணிந்தும், தலையில் கட்சியின் சின்னம் பொறித்த தொப்பி மற்றும் கண்ணாடி அணிந்தும், மீசை வைத்தும் காணப்பட்ட

குழந்தை ஆவ்யன் தோமரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பெரும் கவனத்தை கவா்ந்தது. கிழக்கு தில்லி, மயூா் விஹாரைச் சோ்ந்த அந்தக் குழந்தையின் தந்தையும், ஆம் ஆத்மியின் ஆதரவாளருமான ராகுல் தோமருடன் அந்த ஒரு வயதுடைய குழந்தை வந்திருந்தான்.

முதல்வராக கேஜரிவால் பதவியேற்கும் விழாவில் குழந்தை ஆவ்யன் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டுள்ளாா் என்று அக்கட்சியின் நிா்வாகி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com