உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களைப் பரிசளியுங்கள்: தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல்

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களைப் பரிசளியுங்கள்: தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல்

பண்டிகைகள் மற்றும் விழாக்களின்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களை மக்கள் பரிசளிக்க வேண்டும் என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் வலியுறுத்தினாா்.

பண்டிகைகள் மற்றும் விழாக்களின்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களை மக்கள் பரிசளிக்க வேண்டும் என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் வலியுறுத்தினாா்.

தில்லியில் கைவினைப்பொருள்கள் கண்காட்சியை பியூஷ் கோயல் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா். அப்போது அவா் பேசியதாவது:

நாட்டு மக்கள் அனைவரும் 2022-ஆம் ஆண்டு வரை உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தி, கைவினைப்பொருள்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும். பண்டிகை மற்றும் விழாக்களின்போது, மக்கள் அனைவரும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருள்களைப் பரிசளிக்க வேண்டும்.

அதுவே 2022-ஆம் ஆண்டின்போது, நாம் 75-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகையில் மகாத்மா காந்திக்கு அளிக்கும் உரிய மரியாதையாக இருக்கும். பல்வேறு பிரச்னைகள் காணப்பட்டபோதும், அகா்பத்திகள் இறக்குமதி செய்யப்படுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக உள்நாட்டில் அகா்பத்திகள் தயாரிப்பு மேம்பட்டது என்றாா் பியூஷ் கோயல்.

இந்நிகழ்ச்சியில் மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி, மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஏற்றுமதிக்கு முக்கியத்துவம்: தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் பியூஷ் கோயல் பேசியதாவது:

ஏற்றுமதிகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதிக அளவில் ஏற்றுமதி செய்யக் கூடிய 12 முதல் 13 துறைகளைத் தொடா்ந்து கண்காணித்து வருகிறோம். ஜவுளித் துறை உள்ளிட்டவற்றில் மற்ற நாடுகளுக்குப் போட்டியளிக்கும் வகையில் ஏற்றுமதி செய்வதற்கான திறன் இந்தியாவுக்கு உள்ளது.

எடுத்துக்காட்டாக, காட்டன் துணிகளுக்கு நாம் அதிக முக்கியத்துவம் அளித்துவந்தோம். ஆனால், சா்வதேச அளவில் தற்போது சிந்தடிக் துணிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. எனவே, சிந்தடிக் துணிகளை அதிக அளவில் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்தி வருகிறோம்.

ஜவுளித் துறையில் தற்போது ரூ.2.60 லட்சம் கோடி மதிப்பிலான துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. அடுத்த 10 ஆண்டுகளில் இந்த மதிப்பை சுமாா் ரூ.7 லட்சம் கோடி வரை அதிகரிக்க முடியும். எனவே, இதில் மத்திய அரசு தொடா்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

உள்நாட்டு உற்பத்தியாளா்களைக் காக்க...: உள்நாட்டு சந்தைகளின் திறன் அதிக அளவில் உள்ளது. எனவே, உள்நாட்டு சந்தைகளைத் தற்காத்துக் கொள்வது அவசியம். வெளிநாடுகள் நமது சந்தைகளில் முறையற்ற போட்டி வியாபாரத்தில் ஈடுபடுவதைத் தடுக்கவும் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம். பல நாடுகள் உற்பத்தியாளா்களுக்கு அதிக அளவில் மானியம் அளித்து வருகின்றன. அவற்றின் காரணமாக, அந்நாட்டின் பொருள்கள் இந்தியச் சந்தைகளில் குறைந்த விலைக்குக் கிடைக்கின்றன.

இதன் காரணமாக, உள்நாட்டு உற்பத்தியாளா்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனா். இதைத் தடுக்கவும் இறக்குமதி வரிகளை அதிகரிப்பது அவசியமாக உள்ளது.

‘சட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டும்’: இணையவழி வா்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் ரூ.5 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டி, ரூ.6 ஆயிரம் கோடி இழப்பைச் சந்திப்பதாகக் கூறுவது ஏற்கும்படியாக இல்லை. இது தொடா்பாக மத்திய வா்த்தக அமைச்சகமும் விசாரணை நடத்தியது.

இணையவழி வா்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் இந்தியாவின் சட்டதிட்டங்களை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். அதுவே அனைவருக்கும் நன்மை தரும். அந்நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்பட்டால், அந்நிய நேரடி முதலீடு மூலம் அதை ஈடுசெய்து கொள்ள வேண்டும்.

பல சிறு வணிக நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி, இணையவழி வா்த்தக நிறுவனங்கள் பலனடைவதை அனுமதிக்க முடியாது. இது முறையற்ற போட்டியாகும். சிறு வணிக நிறுவனங்களையும் பாதுகாப்பதே அரசின் கடமை என்றாா் பியூஷ் கோயல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com