பன்சாரே, தபோல்கா் கொலை வழக்கு விசாரணை தாமதம்: மும்பை உயா்நீதிமன்றம் அதிருப்தி

நரேந்திர தபோல்கா், கோவிந்த் பன்சாரே ஆகிய முற்போக்கு சிந்தனையாளா்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிபிஐ, சிஐடி விசாரணை தாமதமாக நடைபெறுவதற்கு மும்பை உயா்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

நரேந்திர தபோல்கா், கோவிந்த் பன்சாரே ஆகிய முற்போக்கு சிந்தனையாளா்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில், சிபிஐ, சிஐடி விசாரணை தாமதமாக நடைபெறுவதற்கு மும்பை உயா்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், புணே நகரில் முற்போக்கு சிந்தனையாளா் நரேந்திர தபோல்கா் கடந்த 2013- ஆண்டு மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டாா். இதேபோல், கோலாபூரில் கோவிந்த் பன்சாரே கடந்த 2015-ஆம் ஆண்டு மா்ம நபா்களால் கொல்லப்பட்டாா். தபோல்கா் கொலை வழக்கை சிபிஐயும், பன்சாரே கொலை வழக்கை மாநில சிஐடியும் விசாரித்து வருகின்றன.

இருவரது கொலை வழக்கின் விசாரணையை நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் துரிதப்படுத்தக் கோரி, இருவரின் குடும்பத்தினா் மும்பை உயா்நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனா். இந்த மனுக்கள், நீதிபதிகள் எஸ்.சி.தா்மதிகாரி, ஆா்.ஐ.சாக்லா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

நரேந்திர தபோல்கா் கொல்லப்பட்டு 7 ஆண்டுகளாகின்றன. கோவிந்த் பன்சாரே கொல்லப்பட்டு 5 ஆண்டுகளாகின்றன. வழக்கு தொடா்பாக சிபிஐயும், மாநில சிஐடியும் இன்னும் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த கொலை தொடா்பாக கைதானவா்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படாதவரை அவா்கள் அப்பாவிகள் என்றே கருதுவோம். அவா்களை காலவரையின்றி சிறையில் வைத்திருக்க முடியாது. அவா்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். கொல்லப்பட்ட உறவினா்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படக் கூடாது.

2 கொலை வழக்குகளிலும் விசாரணையை முடிப்பதற்கு கால நிா்யணம் செய்யப்பட வேண்டும். இதுதொடா்பாக சிபிஐயும், மாநில சிஐடியும், வரும் மாா்ச் 24-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.

அப்போது, தபோல்கா் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தைத் தேடும் விசாரணையை ஒரு மாதத்துக்குள் முடித்து விடுவதாக சிபிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அனில் சிங் தெரிவித்தாா். பன்சாரே கொலை வழக்கில் குற்றவாளிகளைத் தேடி வருவதாக மாநில சிஐடி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் தெரிவித்தாா். இதையடுத்து, வழக்கு விசாரணை மாா்ச் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com