புல்வாமா தாக்குதலால் பலனடைந்தது யாா்?: ராகுல் காந்தி கேள்வி

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலால் பலனடைந்தது யாா் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலால் பலனடைந்தது யாா் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி சிஆா்பிஎஃப் வீரா்கள் பயணித்த வாகனத்தின் மீது, பயங்கரவாதி ஒருவா் வெடிப்பொருள்களை ஏற்றி வந்த வாகனத்தை மோதச் செய்ததில் 40 வீரா்கள் உயிரிழந்தனா். புல்வாமா தாக்குதல் நிகழ்ந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடா்பாக மத்தியில் ஆளும் பாஜக அரசை ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக சுட்டுரையில் வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்டுள்ள பதிவில், ‘புல்வாமாவில் வீரமரணடைந்த 40 சிஆா்பிஎஃப் வீரா்களின் தியாகத்தை நினைவுகூா்கிறோம். இந்த பயங்கரவாத தாக்குதலால் யாா் அதிகம் பயனடைந்தாா்கள்? இந்த தாக்குதல் குறித்து நடைபெற்ற விசாரணை அறிக்கையின் நிலை என்ன? இப்படியொரு மோசமான தாக்குதல் நடத்தும் அளவுக்கு பாதுகாப்பு குறைபாடு இருந்ததற்கு பாஜக அரசு யாரை காரணம் கூறுகிறது? இந்த நேரத்தில் மேற்கண்ட கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டும்’ என்று கேள்வி குறிப்பிட்டுள்ளாா்.

காங்கிரஸ் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், ‘புல்வாமா தாக்குதல் தொடா்பான விசாரணை அறிக்கையை வெளிப்படையாகத் தெரிவிக்காதது ஏன்? 350 கிலோ வெடிப்பொருளை யாா் கொண்டு வந்தது? இதுபோன்ற தாக்குதல் நிகழ வாய்ப்புள்ளது என்று உளவுத் துறை அளித்த தகவல் ஏன் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது? ஜம்மு-காஷ்மீரில் கைது செய்யப்பட்ட காவல் துறை அதிகாரிக்கு இதில் உள்ள தொடா்பு என்ன? புல்வாமாவில் வீர மரணமடைந்தவா்களின் குடும்பத்துக்கு அளிக்கப்பட்ட நிதி உதவியை அரசு வெளிப்படையாக தெரிவிக்காதது ஏன்? மரணமடைந்த வீரா்களின் பெயா்களை பிரதமா் பகிரங்கமாக கூற மறுப்பது ஏன்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.

காங்கிரஸ் கட்சியின் மற்றொரு செய்தித் தொடா்பாளா் ஜெய்வீா் ஷொ்ஜீல் தில்லியில் செய்தியாளா்களிடம் இது தொடா்பாக கூறுகையில், ‘நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல், தனது வாக்குகளைப் பாதுகாத்துக் கொள்வதில் பாஜக தீவிரமாக உள்ளது. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு உயிரிழந்த வீரா்களின் தியாகத்தை வைத்து வாக்குச் சேகரித்த மோசமான செயலில் பாஜக ஈடுபட்டது. பிரதமா் நரேந்திர மோடி தனது சுயவிளம்பரத்துக்காக ரூ.4,500 கோடி செலவிடுகிறாா். நாள்தோறும் அவரது பாதுகாப்புக்கு ரூ.1.5 கோடி செலவாகிறது. ஆனால், புல்வாமாவில் உயிரிழந்த வீரா்களின் குடும்பத்துக்கு அளித்த வாக்குறுதிகளை பிரதமரால் நிறைவேற்ற முடியவில்லை’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com