கர்நாடக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது

கர்நாடக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் திங்கள்கிழமை (பிப்.17) தொடங்குகிறது.
Karnataka BJP candidate
Karnataka BJP candidate

கர்நாடக சட்டப் பேரவைக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் திங்கள்கிழமை (பிப்.17) தொடங்குகிறது.
 கர்நாடகத்தின் 15-ஆவது சட்டப்பேரவையின் 6-ஆவது கூட்டத்தொடர் பெங்களூரு, விதானசெளதாவில் உள்ள சட்டப்பேரவையில் திங்கள்கிழமை தொடங்குகிறது. 2020-ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவை உறுப்பினர்களின் கூட்டுக் கூட்டத்தில் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு ஆளுநர் வஜுபாய்வாலா உரை நிகழ்த்துகிறார்.
 அதன்பிறகு, செவ்வாய்க்கிழமை (பிப். 18) அவை மீண்டும் கூடியதும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது விவாதம் நடத்தப்படுகிறது. பிப்.19, 20-ஆம் தேதி வரை விவாதம் தொடர்கிறது. அதன்பிறகு, அவை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் மார்ச் 2-ஆம் தேதி கூடுகிறது.
 அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரிக்கப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை நினைவுக் கூரும் வகையில், மார்ச் 2, 3 ஆகிய தேதிகளில் அரசியலமைப்புச் சட்டம் குறித்து சிறப்பு விவாதம் நடத்தப்படுகிறது. இந்த இரு நாள்களிலும் அரசியலமைப்புச் சட்டம், அதன் அடிப்படை நோக்கங்கள், எதிர்பார்ப்புகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. மார்ச் 4-ஆம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதங்களுக்கு முதல்வர் எடியூரப்பா பதிலளித்துப் பேசுகிறார்.
 நிதிநிலை அறிக்கை: மார்ச் 5-ஆம் தேதி காலை 11 மணிக்கு 2020-21-ஆம் ஆண்டுக்கான மாநில நிதிநிலை அறிக்கையை முதல்வர் எடியூரப்பா தாக்கல் செய்கிறார். விவசாயம், நீர்ப்பாசனத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிதிநிலை அறிக்கையாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 சட்ட முன்வடிவுகள்: இந்த கூட்டத்தொடரில், 15-ஆவது சட்டப்பேரவையின் 2-ஆவது கூட்டத் தொடரின்போது தாக்கல் செய்யப்பட்ட தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பணி நியமனம் மற்றும் இன்னபிறவற்றின் இட ஒதுக்கீடு) திருத்தச் சட்ட முன்வடிவு பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.
 முக்கியத்துவம்: காங்கிரஸ், மஜதவில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்து, டிச. 5-ஆம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் வென்ற 11 பேரில் 10 பேர் அமைச்சர்களாகியுள்ள நிலையில், இக் கூட்டத் தொடர் நடைபெறுகிறது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com