மத்திய அரசுடன் இணைந்து செயலாற்றுவேன்: பதவியேற்பு விழாவில் கேஜரிவால்

தில்லியை உலகத் தரமிக்க நகரமாக உருவாக்க மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்ற
மத்திய அரசுடன் இணைந்து செயலாற்றுவேன்: பதவியேற்பு விழாவில் கேஜரிவால்

தில்லியை உலகத் தரமிக்க நகரமாக உருவாக்க மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக தில்லியில் ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்ற அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் ஆசிகளையும் பெற விரும்புவதாக அவர் கூறினார்.
 தில்லி சட்டப் பேரவைத் தேர்தலில் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, ராம் லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நண்பகல் 12.15 மணியளவில் முதல்வராக அரவிந்த் கேஜரிவாலுக்கு துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார். கடவுள் ஈஸ்வரரின் பெயரால் கேஜரிவால் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். அவரைத் தொடர்ந்து, கேபினட் அமைச்சர்களாக மணீஷ் சிசோடியா, சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய், இம்ரான் ஹுசேன், கைலாஷ் கெலாட், ராஜேந்திர பால் கெளதம் ஆகிய 6 பேரும் பதவியேற்றுக் கொண்டனர். முந்தைய அரசிலும் இவர்கள் அமைச்சர்களாக பதவிவகித்தனர்.
 விழாவில் சுமார் 20 நிமிடங்கள் முதல்வர் கேஜரிவால் ஆற்றிய உரை: இன்று "உங்கள் மகன்' மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றுள்ளேன். தில்லிவாசி ஒவ்வொருவரின் வெற்றி. கடந்த ஐந்து ஆண்டுகளில் தில்லியின் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, வளத்தைக் கொண்டு வர முயன்றோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த வளர்ச்சி தொடர்வதற்கு முயல்வோம். நான் அனைவருக்குமான முதல்வர். கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் ஒரு போதும் பாகுபாடு காட்டியதில்லை. தில்லியில் வசிப்பவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், 2 கோடி மக்களுக்கும் நான் சொல்ல விரும்புவதெல்லாம், நீங்கள் அனைவரும் எனது குடும்பத்தினர். தயக்கமின்றி என்னை அணுகலாம். பணக்காரர், ஏழை, ஜாதி வித்தியாசமின்றி அனைவருக்காகவும் பணியாற்றுவேன்.
 தில்லியை உலகில் அழகான, மிகவும் வளர்ந்த நகரமாக உருவாக்க உங்கள் ஆதரவு தேவை. அனைவருடனும் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன். தேர்தலின் போது பல்வேறு கட்சிகள் இடையே மோதல் இருந்தது. எங்களுக்கு எதிராக கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சிகளை மன்னித்து விட்டோம். தேர்தலின்போது நடந்தவற்றை மறக்குமாறு எதிர்க்கட்சிகளை கேட்டுக் கொள்கிறேன். தில்லியின் வளர்ச்சிக்காக அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். தில்லியை உலகத் தரமிக்க நகரமாக உருவாக்க மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தேன். அவர் வேறு நிகழ்ச்சியில் பங்கேற்றதால் வரமுடியவில்லை என நினைக்கிறேன். தில்லியின் வளர்ச்சிக்காகப் பணியாற்ற எங்களுக்கு அவரது ஆசிகள் வேண்டும் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com