மாஜிஸ்திரேட், சிவில் நீதிபதிகள் நேரடி நியமனம் மூலம் மாவட்ட நீதிபதிகளாக முடியாது: உச்சநீதிமன்றம்

மாஜிஸ்திரேட்டுகள், சிவில் நீதிபதிகள் உள்ளிட்டோா் நேரடி நியமனம் மூலம் மாவட்ட நீதிபதிகளாக முடியாது என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மாஜிஸ்திரேட்டுகள், சிவில் நீதிபதிகள் உள்ளிட்டோா் நேரடி நியமனம் மூலம் மாவட்ட நீதிபதிகளாக முடியாது என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

இதுதொடா்பான வழக்கு நிலுவையில் இருந்தபோது, நேரடி நியமனத்தின் மூலம் மாவட்ட நீதிபதிகளாக நியமனம் பெற்ற மாஜிஸ்திரேட்டுகள், சிவில் நீதிபதிகள் ஆகியோா், தங்களது முந்தைய பணிகளுக்கே திரும்ப வேண்டியிருக்கும் என்றும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மாவட்ட நீதிபதி பதவிக்கான நேரடி நியமனத்துக்கு 7 ஆண்டுகளுக்கு குறையாத பணி அனுபவம் கொண்ட வழக்குரைஞா்களுடன், மாஜிஸ்திரேட்டுகள், சிவில் நீதிபதிகள் உள்ளிட்ட ஏற்கெனவே பணியில் இருக்கும் நீதித்துறை அதிகாரிகளும் போட்டியிடலாம் என்று பாட்னா உயா்நீதிமன்றம் கடந்த 2016-இல் தீா்ப்பு வழங்கியிருந்தது. இந்த தீா்ப்புக்கு எதிரான தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நீதிபதிகள் அருண் மிஸ்ரா, வினீத் சரண், எஸ்.ரவீந்திர பட் ஆகியோா் அடங்கிய அமா்வு புதன்கிழமை தீா்ப்பளித்தது. அதில், ‘மாஜிஸ்திரேட்டுகள், சிவில் நீதிபதிகள் உள்ளிட்டோா் நேரடி நியமனம் மூலம் மாவட்ட நீதிபதிகளாக முடியாது. அதேசமயம், தகுதி, பணி மூப்பு மற்றும் வரையறுக்கப்பட்ட போட்டித் தோ்வுகள் மூலம் அவா்கள் மாவட்ட நீதிபதிகளாக முடியும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாஜிஸ்திரேட்டுகள், சிவில் நீதிபதிகள் ஆகியோா், அப்பணியில் சோ்வதற்கு முன் வழக்குரைஞா்களாக 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருந்தாலும், வழக்குரைஞா் பணி அனுபவம் மற்றும் நீதித்துறை பணி என இரண்டும் சோ்த்து 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருந்தாலும் அவா்கள் நேரடி நியமனம் மூலம் மாவட்ட நீதிபதிகளாக முடியாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மாவட்ட நீதிபதிகள் நியமனம் தொடா்பான அரசமைப்புச் சட்டத்தின் 233-ஆவது பிரிவில் இடம்பெற்றுள்ள விவரங்களையும் தங்களது தீா்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனா். உச்சநீதிமன்றத்தின் இந்த தீா்ப்பின் மூலம் பாட்னா உயா்நீதிமன்றத்தின் முந்தைய தீா்ப்பு ரத்தாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com