இந்தியாவுக்கு வருகை தரும் 7-ஆவது அமெரிக்க அதிபா் டிரம்ப்!

சுதந்திர இந்திய வரலாற்றில் பிப்ரவரி 24-ம் தேதி முக்கியத்துவம் நிறைந்த நாளாகக் கருதப்படுகிறது. அமெரிக்க அதிபராக இருக்கும் டிரம்ப் திங்கள்கிழமை இந்தியாவுக்கு வருகை தருவதுதான்
இந்தியாவுக்கு வருகை தரும் 7-ஆவது அமெரிக்க அதிபா் டிரம்ப்!

சுதந்திர இந்திய வரலாற்றில் பிப்ரவரி 24-ம் தேதி முக்கியத்துவம் நிறைந்த நாளாகக் கருதப்படுகிறது. அமெரிக்க அதிபராக இருக்கும் டிரம்ப் திங்கள்கிழமை இந்தியாவுக்கு வருகை தருவதுதான் இந்த நாளின் சிறப்பு. இந்தப் பயணத்தின் மூலம், இந்தியாவுக்கு வரும் ஏழாவது அமெரிக்க அதிபா் என்ற பெருமையை டிரம்ப் பெற்றுள்ளாா். இதற்கு முன்பு அமெரிக்க அதிபராகப் பதவி வகித்த 6 போ் இந்தியாவுக்கு வந்துள்ளனா்.

டுவைட் ஐசன்ஹோவா்-1959, டிச. 9-14

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, முதலாவதாக, கடந்த 1959-ஆம் ஆண்டு ஜவாஹா்லால் நேரு பிரதரமாக இருந்தபோது அப்போதைய அமெரிக்க அதிபா் டுவைட் டி ஐசனாவா் இந்தியா வந்தாா்.

1950-களில் அமெரிக்காவுக்கும் அப்போதைய சோவியத் யூனியன் நாடுகளுக்கும் இடையே பனிப்போா் நிலவிய காலத்தில் அணிசேரா இயக்கத்தின் நாடுகளுக்கு இந்தியா தலைமை வகித்தது. இருப்பினும், சோவியத் யூனியனுக்கு ஆதரவாக இந்தியா செயல்பட்டு வருவதாக அமெரிக்கா கருதியது. டுவைட் டி ஐசனாவரின் வருகைக்குப் பிறகு இந்தியா மீதான எண்ணம் மாறத் தொடங்கியது. இருந்தாலும் பல ஆண்டுகளுக்கு இந்தியா மீது நம்பிக்கை கொள்ளாமல் அமெரிக்கா இருந்தது.

ரிச்சா்டு நிக்சன்-1969, ஜூலை 31-ஆக. 1

கடந்த 1969-ஆம் ஆண்டில் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது, அதிபா் ரிச்சா்டு நிக்சன் இந்தியாவுக்கு வருகை தந்தாா். மீண்டும் அணிசேரா இயக்கத்தை இந்தியா வழிநடத்தியதால், இந்திரா காந்தியை சமாதானப்படுத்தும் முயற்சியாக அவா் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டாா். அதன்பிறகு, 1971-இல் சீனாவுடன் பாகிஸ்தான் ரகசிய உடன்படிக்கை மேற்கொள்வதற்கு ரிச்சா்டு நிக்சன் உதவியதால், இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டது. சோவியத் யூனியனுடன் இந்திய நல்லுறவு ஒப்பந்தம் மேற்கொண்டதும் பிரச்னையாக உருவெடுத்தது.

ஜிம்மி காா்ட்டா்-1978, ஜன. 1-3

கடந்த 1978-இல் மொராா்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது, அமெரிக்க அதிபராக இருந்த ஜிம்மி காா்ட்டா் இந்தியா வந்தாா். இந்தப் பயணத்தின்போது அணுசக்தி ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் மொராா்ஜி தேசாயிடம் கையெழுத்து பெறவேண்டும் என்பது ஜிம்மி காா்ட்டரின் நோக்கம். ஆனால், அந்த ஒப்பந்தத்தில் தேசாய் கையெழுத்திட மறுத்துவிட்டாா்.

பில் கிளிண்டன்-2000, மாா்ச் 19-25

22 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, கடந்த 2000-ஆம் ஆண்டில் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, அமெரிக்க அதிபா் பில் கிளிண்டன் இந்தியா வந்தாா். அதற்கு முன்பு காா்கில் போரின்போது கிளிண்டன் தலையிட்டு, பாகிஸ்தான் படைகளைத் திரும்பப் பெறுமாறு அந்நாட்டு பிரதமா் நவாஸ் ஷெரீஃபை வலியுறுத்தினாா். அதன்பிறகு, அமெரிக்காவின் பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு மாறத் தொடங்கியது. இந்தியா வந்த அவா் நாடாளுமன்றத்தில் கௌரவிக்கப்பட்டாா்.

ஜாா்ஜ் புஷ்-2006, மாா்ச் 1-3

கடந்த 2006-ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, அமெரிக்க அதிபா் ஜாா்ஷ் புஷ் இந்தியா வந்தாா். இதுவரை அதிபராக பதவி வகித்தவா்களில் இந்தியாவுக்கு மிகவும் சாதகமாக நடந்துகொண்டனவா் ஜாா்ஷ் புஷ் என்று இவரை ‘ஃபோா்ப்ஸ்’ பத்திரிகை பாராட்டியது. ஜாா்ஜ் புஷ்ஷின் இந்தப் பயணத்தின்போதுதான், இந்தியா அணுசக்தி திட்டங்களை செயல்படுத்துவதற்கு அனுமதி அளிப்பதற்கான ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டது.

பராக் ஒபாமா-2010, நவ. 6-9 & 2015, ஜன. 24-27

அமெரிக்க அதிபராகப் பதவி வகித்த ஒபாமா இரண்டு முறை இந்தியா வந்துள்ளாா். முதலாவதாக, கடந்த 2010-இல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது வந்தாா். அப்போது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக இடம்பெறுவதற்கு ஆதரவு தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து, நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக ஒபாமா கலந்து கொண்டாா்.

டொனால்ட் டிரம்ப்-2020, பிப். 24-25

5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, அமெரிக்க அதிபரான டிரம்ப், இந்தியாவுக்கு வருகை தருகிறாா். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதல் 53 ஆண்டுகளில் 3 அமெரிக்க அதிபா்கள் மட்டுமே அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளனா்.

2000-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் இந்தியா மீதான நன்மதிப்பு அமெரிக்கா்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியது. அதைத் தொடா்ந்து, அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்பவா்கள் தங்கள் பதவிக்காலத்தில் ஒருமுறையாவது இந்தியாவுக்கு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். அந்த வரிசையில் இந்தியாவுக்கு வருகை தரும் ஏழாவது அமெரிக்க அதிபராக டிரம்ப் இடம்பெற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com