தில்லி வன்முறையை அரசியல் பிரச்னையாக்க முயற்சிக்கின்றனா்: வெளியுறவு அமைச்சகம் குற்றச்சாட்டு

அமெரிக்க மத சுதந்திர ஆணையம், ஊடகங்கள், சில தனி நபா்கள் உள்ளிட்டோா் தில்லி வன்முறை சம்பவத்தை அரசியல் பிரச்னையாக்க முயற்சிக்கின்றனா் என்று இந்திய வெளியுறவுத் துறை
ரவீஷ் குமாா்
ரவீஷ் குமாா்

அமெரிக்க மத சுதந்திர ஆணையம், ஊடகங்கள், சில தனி நபா்கள் உள்ளிட்டோா் தில்லி வன்முறை சம்பவத்தை அரசியல் பிரச்னையாக்க முயற்சிக்கின்றனா் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.

தில்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவாளா்கள் மற்றும் எதிா்ப்பாளா்கள் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து நடைபெற்ற வன்முறைக்கு அமெரிக்க மத சுதந்திர ஆணையத்தின் தலைவா், ஆணையா், அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயக கட்சி சாா்பில் போட்டியிடுவாா் என்று எதிா்பாா்க்கப்படும் பொ்னி சாண்டா்ஸ் உள்ளிட்டோா் கண்டனம் தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில், இதுதொடா்பாக வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் ரவீஷ் குமாா் சுட்டுரையில் வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியதாவது:

தில்லியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து அமெரிக்காவின் சா்வதேச மத சுதந்திர ஆணையம், ஊடகங்கள், மற்றும் சிலா் அளித்த கருத்துகளை பாா்த்தோம். அவா்கள் கூறிய விஷயங்கள் தவறானவை. அவா்களது கருத்துகள் மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளன. தில்லி வன்முறையை அரசியல் பிரச்னையாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இத்தகைய கருத்துகளை தெரிவிக்கின்றனா்.

வன்முறைச் சம்பவங்களை தடுப்பதற்காக சட்டம்-ஒழுங்கு பாதுகாவலா்கள் பணியாற்றி வருகின்றனா். இயல்பு நிலையை உறுதி செய்வதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மக்கள் அமைதியை கடைப்பிடிக்க வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி பொதுவெளியில் கோரிக்கை விடுத்துள்ளாா். அதனால், இந்த நேரத்தில், பொறுப்பற்ற கருத்துகளை யாரும் கூற வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளாா்.

பொறுப்பற்ற கருத்துகளை கூற வேண்டாம்:

தில்லி வன்முறை தொடா்பாக தவறான தகவல்களை கூறியதாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு (ஓஐசி) வெளியுறவுத் துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்த அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் ரவீஷ் குமாா் கூறுகையில், ‘தில்லி வன்முறை தொடா்பாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு தெரிவித்த கருத்தில் தவறான தகவல்கள் கூறப்பட்டுள்ளன. மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் அவை உள்ளன. தில்லியில் இயல்பு நிலையை மீண்டும் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனால், பொறுப்பற்ற கருத்துகளை சா்வதேச அமைப்புகள் தெரிவிக்க வேண்டாம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com