குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
ஜோத்பூர் கூட்டத்தில் அமித் ஷா
ஜோத்பூர் கூட்டத்தில் அமித் ஷா

ஜோத்பூர்: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் இருந்து ஒரு அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஆதர்ஷ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் வெள்ளியன்று பிரமாண்ட கூட்டம் ஒன்றை பாஜக ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்து கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி இந்தியாவுக்கு வரும் சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதற்காகவே,  குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.  ராகுல் காந்திக்கு அதை புரிந்து கொள்ள இயலாவிட்டால் அவருக்காக இத்தாலிய மொழியில் அதை மொழிபெயர்த்து தருகிறேன்.

யாரெல்லாம்  இதை அரசியல் ரீதியிலான விளையாட்டுக்கு பயன்படுத்துகிறார்களோ அவர்கள்தான் இதற்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபடுகிறார்கள். எனவேதான் நாங்கள் பொதுமக்களிடம் அதுகுறித்து எடுத்துக் கூறுவதென்று முடிவு செய்திருக்கிறோம்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இதுதொடர்பான அரசியல் ரீதியிலான விளையாட்டுகளில் ஈடுபடுவதை விடுத்து, கோட்டா மாவட்டத்தில் பச்சிளங்குழந்தைகள் இறக்கும் விவகாரத்தில் கவனம் செலுத்தலாம்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பாகிஸ்தானில் இருந்து வரும் அகதிகளுக்கு குடியுரிமை தருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் வாக்கு வங்கி ஆதாயத்திற்காக காங்கிரசால் அதை நிறைவேற்ற இயலாது.

தேசப் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் 30% சிறுபான்மையினர்கள் இருந்தார்கள். தற்போது பாகிஸ்தானில் 3% மற்றும் வங்கதேசத்தில் 7% சிறுபான்மையினர் மட்டுமே உள்ளார்கள்.  இதர பேர் எங்கே போனார்கள் என்று நான் ராகுல் மற்றும் மம்தாவை கேட்கிறேன். இதுதொடர்பாக மனித உரிமை ஆணைய விசாரணை நடைபெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

அங்கிருந்து துன்புறுத்தலுக்கு உள்ளாகி வரும்  அகதிகள் குறித்து யாரும் கவலைப்படாத போது நமது பிரதமர் அவர்கள் நலனில் அக்கறை செலுத்துகிறார். நம்மைப் போலவே அவர்களுக்கும் இந்த நாட்டில் வாழ உரிமை உள்ளது.

இவ்வாறு அமித் ஷா பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com