இஸ்ரோ விண்வெளி வீரர்களுக்கான உணவுப் பட்டியலில் பிரியாணி, அல்வா!

இஸ்ரோவின் கனவுத் திட்டமான விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்குச் செல்லும் வீரர்களுக்கான உணவுப் பட்டியல் தயாராகி வருகிறது.
இஸ்ரோ விண்வெளி வீரர்களுக்கான உணவுப் பட்டியலில் பிரியாணி, அல்வா!


பெங்களூரு: இஸ்ரோவின் கனவுத் திட்டமான விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்குச் செல்லும் வீரர்களுக்கான உணவுப் பட்டியல் தயாராகி வருகிறது.

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் கீழ் மைசூருவில் இயங்கும் உணவு பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் இந்த உணவுப் பட்டியலை தயாரித்துள்ளது.

ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்குச் செல்லும் வீரர்களுக்கு சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை வழங்கும் வகையில், பிரியாணி, அல்வா, உள்ளிட்ட 30 வகையான சுவையான உணவுகளை தயாரித்து அதனை பாக்கெட்டுகளில் அடைத்து விண்வெளி வீரர்களுக்கு அனுப்பி விடுவார்கள். விண்வெளி வீரர்கள் தங்களுக்குத் தேவையான உணவுகளை தேர்வு செய்து, பாக்கெட்டுகளில் இருந்து எடுத்து அப்படியே சாப்பிடும் வகையில் இந்த 30 வகையான உணவுகளும் தயாரிக்கப்பட உள்ளன.

இதற்கான பணியில் உணவு பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் ஈடுபட்டுள்ளது.

இந்த உணவுப் பட்டியலில் தற்போது சப்பாத்தி, சிக்கன் பிரியாணி, அல்வா, சிக்கன் வறுவல், பாதாம், பன்னீர் உள்ளிட்ட உணவுகளும் இடம்பெற்றுள்ளன. இதில் விண்வெளி வீரர்களின் விருப்பத்துக்கேற்ப சில மாற்றங்களும் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வரை நாங்கள் விண்வெளிக்குச் செல்லும் வீரர்களை கவனத்தில் கொண்டு உணவுகளைத் தயாரிக்கவில்லை, இந்தியாவில் அதிகமானோரால் விரும்பி உண்ணப்படும் உணவுகளை மட்டுமே தேர்வு செய்து பட்டியல் தயாரித்துள்ளோம். இதே வழிமுறையைத்தான் நாசாவும் பின்பற்றுகிறது என்று மூத்த அதிகாரி கூறுகிறார்.

ககன்யான் திட்டத்தை 2022-ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. விண்வெளிக்கு செல்லவிருக்கும் வீரர்கள், ரஷியாவில் பயிற்சி பெறுகிறார்கள். 

இந்நிலையில், விண்வெளி வீரர்களுக்குத் தேவையான சில வசதிகளை ஏற்படுத்தித் தருவதற்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகத்துடன் (டிஆர்டிஓ) இஸ்ரோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதுதொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: விண்வெளியில் வீரர்களுக்குத் தேவையான உணவு, அவர்களது உடல்நலத்தைக் கண்காணிக்கும் கருவிகள், அவசரக்கால உதவிக்குத் தேவையான பொருள்கள், பாராசூட் உள்ளிட்டவற்றை வழங்கும் வகையில் இஸ்ரோ-டிஆர்டிஓ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரோ பிரதிநிதிகளும், டிஆர்டிஓ பிரதிநிதிகளும் கையெழுத்திட்டனர். இதன் மூலம் விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்குத் தேவையானவற்றை இஸ்ரோவுக்கு டிஆர்டிஓ வழங்கவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக டிஆர்டிஓ தலைவர் டாக்டர் ஜி. சதீஷ் ரெட்டி கூறுகையில், ககன்யான் திட்டத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com