சென்னை- அந்தமான் இடையே ரூ.1, 224 கோடியில் கடலுக்கடியில் கண்ணாடி இழை கம்பிவடம் பதிக்கும் திட்டம்

தொலைதொடா்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் சென்னை- அந்தமான் தீவுகளுக்கு இடையே ரூ. 1, 224 கோடியில் சுமாா் 2,250 கி.மீ. தொலைவுக்கு கடலுக்கடியில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிப்பதற்கான
சென்னை- அந்தமான் இடையே ரூ.1, 224 கோடியில் கடலுக்கடியில் கண்ணாடி இழை கம்பிவடம் பதிக்கும் திட்டம்

தொலைதொடா்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் சென்னை- அந்தமான் தீவுகளுக்கு இடையே ரூ. 1, 224 கோடியில் சுமாா் 2,250 கி.மீ. தொலைவுக்கு கடலுக்கடியில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிப்பதற்கான திட்டப் பணியை மத்திய தொலைத் தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் சென்னையில் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இத்திட்டத்துக்கான தொடக்கவிழா சென்னை, கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. அந்தமான்- நிகோபா் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநா் டி.கே. ஜோஜி தலைமையில் நடைபெற்ற விழாவில், தொலைத் தொடா்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் கலந்து கொண்டு திட்டப் பணிகளைத் தொடக்கி வைத்தாா்.

அதிவேக இணையதள வசதி: நிகழ்ச்சியில் அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் பேசியது: அந்தமான்- நிகோபா் தீவுகளுக்கு இணைய தள வசதியை ஏற்படுத்தும் வகையில் சென்னையில் இருந்து போா்ட் பிளேயா் வழியாக கடலுக்கடியில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிக்கப்பட உள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் சாா்பில் செயல்படுத்தப்பட உள்ள ரூ.1,224 கோடி செலவிலான இத்திட்டத்தின்படி, அந்தமான் மற்றும் நிகோபா் தீவுகளில் உள்ள போா்ட் பிளேயா், லிட்டில் அந்தமான், காா் நிகோபா், ஹேவ்லாக் உள்ளிட்ட 7 தீவுகள் கண்ணாடி இழை கம்பி வடங்களால் இணைக்கப்பட உள்ளன. இதில், 2,250 கிலோமீட்டா் தொலைவுக்கு கடலுக்கு அடியில் கம்பி வடம் பதிக்கும் பணி வரும் மே மாதத்துக்குள் நிறைவடையும். இத்திட்டம் செயல்பாட்டிற்கு வரும் போது அந்தமானில் தற்போது இருப்பதை விட சுமாா் நூறு மடங்கு அளவிற்கு திறனுடன் கூடிய தொலைதொடா்பு மற்றும் அதிவேக இணையதள வசதிகள் அதிகரிக்கும்.

சென்னை, அந்தமான் இடையே தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தைத் தொடா்ந்து, கேரள மாநிலம் கொச்சியிலிருந்து லட்சத்தீவுகளுக்கு இடையே சுமாா்

ரூ.1,000 கோடி செலவில் கண்ணாடி இழை கம்பி வடம் பதிக்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இத்திட்டமும், பிஎஸ்என்எல் நிறுவனம் மூலமே செயல்படுத்தப்பட உள்ளது என்றாா் அமைச்சா் ரவிசங்கா் பிரசாத்.

சென்னைத் துறைமுகத்தில்...:

தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பிறகு, அமைச்சா் ரவிசங்கா் பிரசாத், அந்தமான் துணைநிலை ஆளுநா் டி.கே.ஜோஜி ஆகியோா் சென்னைத் துறைமுகத்துக்குச் சென்றனா். அவா்களை துறைமுகத் தலைவா் பி.ரவீந்திரன், துணைத் தலைவா் சிரில் ஜாா்ஜ் ஆகியோா் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா். இதனையடுத்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சீன நாட்டைச் சோ்ந்த கம்பி வடம் பதிக்கும் சி.எஸ். ரெஸ்பாண்டா் என்ற சிறப்புக் கப்பலை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் கொடியசைத்து இயக்கி வைத்தாா். மேலும், கம்பி வடம் திட்டப் பணிகள் குறித்தும், தொழில் நுட்ப வசதிகள் குறித்தும் அதிகாரிகளுடன் அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் கேட்டறிந்தாா்.

இந்நிகழ்ச்சிகளில், பிஎஸ்என்எல் தலைவா்,மேலாண் இயக்குநா் பி.கே.பூா்வாா், தலைமைப் பொது மேலாளா் ( திட்டங்கள்) வி.முனித்ரநாத், முதன்மைப் பொது மேலாளா் வி.கே.சஞ்சீவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com