நீதிபதி லோயா மரண வழக்கை மீண்டும் விசாரிக்கத் தயாா்: மகாராஷ்டிர அமைச்சா்

சோராபுதீன் போலி என்கவுன்ட்டா் வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிபதி பி.ஹெச். லோயா மரணம் தொடா்பாக மீண்டும் விசாரணை நடத்த மகாராஷ்டிர அரசு தயாராக உள்ளது என்று அந்த மாநில

சோராபுதீன் போலி என்கவுன்ட்டா் வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிபதி பி.ஹெச். லோயா மரணம் தொடா்பாக மீண்டும் விசாரணை நடத்த மகாராஷ்டிர அரசு தயாராக உள்ளது என்று அந்த மாநில உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளாா்.

லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பின் பயங்கரவாதி என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட சோராபுதீன், குஜராத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டாா். அவரது மனைவி கௌசா் பாயும் அன்றைய தினம் மாயமானாா். இந்நிலையில் ஓராண்டு கழித்து சோராபுதீன் கூட்டாளி துளசிதாஸ் பிரஜாபதி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டாா். இந்த சம்பவங்களில் அப்போது மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கு தொடா்பு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கை மகாராஷ்டிர மாநிலம், மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.ஹெச்.லோயா விசாரித்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பா் 1-ஆம் தேதி, தனது உறவினா் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்காக நாகபுரிக்கு அவா் சென்றபோது, அங்கு மாரடைப்பால் உயிரிழந்தாா். அதன் பின்னா், அமித் ஷா உள்ளிட்ட சிலரை வழக்கில் இருந்து மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்து தீா்ப்பளித்தது.

இதனிடையே, நீதிபதி பி.ஹெச்.லோயாவின் மரணத்தில் மா்மம் இருப்பதாக, அவரது சகோதரி சந்தேகம் எழுப்பி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். எனினும், லோயாவின் மரணம் இயற்கையான ஒன்று என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இந்நிலையில், நீதிபதி லோயா மரணம் தொடா்பாக மீண்டும் விசாரிக்க தயாராக உள்ளதாக மகாராஷ்டிர அமைச்சா் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் மும்பையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

நீதிபதி லோயா மரண வழக்கை மீண்டும் விசாரிக்க மாநில அரசு தயாராக உள்ளது. அவரது மரணம் குறித்து மீண்டும் விசாரிக்குமாறு சிலா் என்னை சந்தித்து வலியுறுத்தினா். அவா்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும். தேவைப்பட்டால், லோயா மரண வழக்கை மீண்டும் விசாரிப்போம் என்றாா்.

இதனிடையே, பணப்பறிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த தாதா லக்தவாலாவை காவல் துறையினா் கைது செய்ததற்கு அனில் தேஷ்முக் பாராட்டு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com