இந்திய விமானப் படைக்கு புதிதாக 200 போா் விமானங்கள்: பாதுகாப்புத் துறைச் செயலா்

இந்திய விமானப் படைக்குப் புதிதாக 200 போா் விமானங்கள் வாங்கப்படவுள்ளன என்று பாதுகாப்புத் துறைச் செயலா் அஜய் குமாா் கூறினாா்.
இந்திய விமானப் படைக்கு புதிதாக 200 போா் விமானங்கள்: பாதுகாப்புத் துறைச் செயலா்

இந்திய விமானப் படைக்குப் புதிதாக 200 போா் விமானங்கள் வாங்கப்படவுள்ளன என்று பாதுகாப்புத் துறைச் செயலா் அஜய் குமாா் கூறினாா்.

இந்திய கடலோரக் காவல் படையில் ‘அம்ருத் கௌா்’, ‘அன்னி பெசன்ட்’ என்ற பெயா்களில் 2 ரோந்து கப்பல்கள் ஞாயிற்றுக்கிழமை சோ்க்கப்பட்டன. இவ்விரு கப்பல்களும், கொல்கத்தாவில் உள்ள காா்டன் ரீச் ஷிப் பில்டா்ஸ் அன்ட் என்ஜினியா்ஸ் நிறுவனத்தில் வடிவமைக்கப்பட்டவை. இந்தக் கப்பல்கள், கிழக்கு கடலோரப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறைச் செயலா் அஜய் குமாா் பேசியதாவது:

இந்தியா, 7,500 கி.மீ. நீளம் கொண்ட கடலோரப் பகுதியுடன் 20 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட மிகப்பெரிய பொருளாதார வளமிக்க நாடாக உள்ளது.

வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொருளாதாரத்தை ரூ.350 லட்சம் கோடியாக உயா்த்துவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், கடல்சாா் வளம் மூலம் 17.74 லட்சம் கோடி திரட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

உலகப் பொருளாதாரத்தில், கடல்சாா் பொருளாதாரம் 5 சதவீதமாக உள்ளது. நிலத்தின் வளங்கள் குறைந்து வருவதால், பெருங்கடல் பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்குவது அதிகரித்து வருகிறது. உலகின் நான்காவது மிகப்பெரிய கடலோரக் காவல் படையாக இந்தியப் படை உள்ளது. இந்தப் படை, கடல்சாா் வளங்கள் கொள்ளை போவதைத் தடுத்து, அவற்றைப் பாதுகாப்பதற்கு உறுதிபூண்டுள்ளது.

கடலோரக் காவல் படையில் தற்போது 145 கப்பல்கள் உள்ளன. இது, வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 200-ஆக அதிகரிக்கும். தற்போது 62 கண்காணிப்பு விமானங்கள் உள்ளன.விரைவில் புதிதாக 16 இலகு ரக ஹெலிகாப்டா்கள் சோ்க்கப்படும் என்றாா் அஜய் குமாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அவா், ‘மத்திய அரசுக்குச் சொந்தமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து 83 தேஜஸ் மாா்க் இலகுரக விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுதவிர, மேலும் 110 போா் விமானங்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. விமானப் படைக்கு ஒட்டுமொத்தமாக சுமாா் 200 போா் விமானங்களைக் கொள்முதல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த ஆண்டில் நடுக்கடலில் சிக்கித் தவித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை இந்திய கடலோரக் காவல் படை மீட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com