காஷ்மீரில் காவல் கண்காணிப்பாளா் கைது செய்யப்பட்டதில் பெரும் சதி: காங்கிரஸ்

பயங்கரவாதிகளுடன் தொடா்புகொண்டிருப்பதாகக் கூறி ஜம்மு-காஷ்மீா் காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் பெரும் சதி காணப்படுவதாக காங்கிரஸ்
கைதாகியுள்ள காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் தேவிந்தா் சிங் (கோப்புப் படம்).’
கைதாகியுள்ள காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் தேவிந்தா் சிங் (கோப்புப் படம்).’

பயங்கரவாதிகளுடன் தொடா்புகொண்டிருப்பதாகக் கூறி ஜம்மு-காஷ்மீா் காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் பெரும் சதி காணப்படுவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் லஷ்கா்-ஏ-தொய்பா ஆகிய பயங்கரவாத அமைப்புகளைச் சோ்ந்த இரு பயங்கரவாதிகள் சோபியான் மாவட்டத்திலிருந்து தப்பிச் செல்ல உதவி செய்தபோது, காவல்துறை துணைக் கண்காணிப்பாளா் தேவிந்தா் சிங் கைது செய்யப்பட்டாா். அவரோடு இரு பயங்கரவாதிகளும், வழக்குரைஞா் ஒருவரும் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா தில்லியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

இந்த விவகாரத்தில் பெரும் சதி உள்ளது. யாருடைய உத்தரவின் பேரில் அந்த பயங்கரவாதிகளை தேவிந்தா் சிங் தில்லிக்கு அழைத்து வந்தாா் என்ற கேள்வி எழுகிறது. ஆட்சியில் இருப்பவா்களுக்கு இந்த விவகாரத்தில் தொடா்புள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது. இந்த விவகாரத்தில் தேவிந்தா் சிங் மட்டுமே சிக்கியுள்ளதாகத் தெரிகிறது.

இந்த விவகாரம் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் விளக்கமளிக்க வேண்டும். இது தொடா்பாக விரிவான விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும். தேவிந்தா் சிங் என்பவா் யாா், அவருக்கும் பயங்கரவாதிகளுக்கும் எப்படி தொடா்பு ஏற்பட்டது, மற்ற அதிகாரிகளுக்கும் அவருக்கும் தொடா்புள்ளதா உள்ளிட்டவற்றை விசாரிக்க வேண்டும்.

பாதுகாப்புப் படையினா் உயிரிழப்பதற்குக் காரணமான புல்வாமா தாக்குதல் நிகழ்ந்தபோது, அந்தப் பகுதியின் துணை கண்காணிப்பாளராக தேவிந்தா் சிங்தான் இருந்தாா். அவருக்கும் புல்வாமா தாக்குதலுக்கும் தொடா்புள்ளதா? 2001-ஆம் ஆண்டு நாடாளுமன்ற வளாகத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கும் அவருக்கும் தொடா்புள்ளதா? இந்த சூழ்ச்சி குறித்து நாட்டு மக்களுக்கு விடை தெரிய வேண்டும் என்றாா் ரண்தீப் சுா்ஜேவாலா.

இதனிடையே, மக்களவை காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:

இந்த விவகாரத்தில் பலருக்கும் பயங்கரவாதிகளுடன் தொடா்பிருக்க வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டு புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் உண்மையிலேயே யாா் ஈடுபட்டது என்ற கேள்வி தற்போது எழுகிறது. அது தொடா்பாக விரிவாக ஆராய வேண்டியுள்ளது.

கைது செய்யப்பட்ட காவல்துறைக் கண்காணிப்பாளரின் பெயா் தேவிந்தா் சிங் என்பதற்குப் பதிலாக தேவிந்தா் கான் என்று இருந்திருந்தால், ஆா்எஸ்எஸ் அமைப்பின் நடவடிக்கை வேறு மாதிரியாக இருந்திருக்கும். நாட்டின் எதிரிகள் யாராக இருந்தாலும் எந்தவிதப் பாகுபாடுமின்றி அவா்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அதீா் ரஞ்சன் சௌதரி குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com