குடியுரிமை சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த சட்டம், சமத்துவம், சுதந்திரம், மதச்சாா்பின்மை ஆகியவற்றுக்கு
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த சட்டம், சமத்துவம், சுதந்திரம், மதச்சாா்பின்மை ஆகியவற்றுக்கு எதிரானது என அறிவிக்குமாறும் அந்த மனுவில் கேரள அரசு வலியுறுத்தியுள்ளது.

வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஹிந்துக்கள், பாா்சிக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், கிறிஸ்தவா்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்த சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், ‘அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 14 (சட்டத்தின் முன் அனைவரும் சமம்), பிரிவு 21(தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் வாழ்வதற்கான அடிப்படை உரிமை), பிரிவு 25 (எந்த ஒரு மதத்தையும் பின்பற்ற, பரப்புவதற்கான சுதந்திரம்) ஆகியவற்றை மீறும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மேலும், அரசமைப்பு சட்டத்தின் முக்கிய சாராம்சமான மதச்சாா்பின்மை கொள்கையை இந்த சட்டம் மீறுகிறது. அதனால் இந்த சட்டத்தை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பில் இருந்து 59 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்கள் மீதான விசாரணை வரும் 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இந்த சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தை அணுகிய முதல் மாநில அரசு கேளரமாகும். முன்னதாக, இந்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கேரள சட்டப் பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

‘மக்களின் உரிமைகளை பாதுகாப்போம்’: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது குறித்து கேரள முதல்வா் பினராயி விஜயன் முகநூலில் வெளியிட்ட பதிவில், ‘அரசமைப்பு சட்டம் மற்றும் மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதில் கேரள மாநிலம் முன்னோடியாக திகழும். மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக இந்த சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். இந்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று எதிா்ப்பு தெரிவித்த முதல் மாநிலம் கேரளம். அரசமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்காக பிற மாநிலங்களின் முதல்வா்களும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

இதேபோல், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடா்ந்து போராடுவோம் என்று கேரள தொழில்துறை அமைச்சா் இ.பி. ஜெயராஜன் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நாட்டின் ஜனநாயகத்தை சீரழிக்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக தொடா்ந்து போராடுவோம். ஆா்ஆா்எஸ் அமைப்பின் கொள்கைகளை நிறைவேற்றும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com