தில்லி பேரவைத் தேர்தல்: கேஜரிவால் அளிக்கும் 10 உத்தரவாதங்கள்!

தில்லி பேரவைத் தேர்தலுக்கான 10 உத்தரவாதங்களை ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டார்.
தில்லி பேரவைத் தேர்தல்: கேஜரிவால் அளிக்கும் 10 உத்தரவாதங்கள்!


தில்லி பேரவைத் தேர்தலுக்கான 10 உத்தரவாதங்களை ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டார்.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்று அதன் முடிவுகள் பிப்ரவரி 11-ஆம் தேதி வெளியாகவுள்ள. இந்நிலையில், தேர்தலுக்கான உத்தரவாதங்களை தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இன்று வெளியிட்டார்.

முதல் உத்தரவாதத்தில் 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் மற்றும் 200 யூனிட் வரை இலவசமாக மின்சாரம் வழங்கப்படுவது தொடரும் என உறுதியளித்துள்ளார். மேலும், நிலத்தடியில் கேபிள்கள் அமைத்து மின்சாரம் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு இல்லத்துக்கும் குழாய் மூலம் 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும் இலவசமாக 20,000 லிட்டர் தண்ணீர் வழங்கப்படும் திட்டம் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது உத்தரவாதத்தில் தில்லியில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் உலகத்தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதற்கான வசதி ஏற்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4வது உத்தரவாதமாக அனைவருக்கும் சிறந்த சுகாதார வசதிகள் ஏற்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

5வது உத்தரவாதத்தில் தில்லி போக்குவரத்து வசதியை விரிவுபடுத்துவது அதேசமயம் மலிவான விலையில் போக்குவரத்து சேவையை வழங்குவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கான இலவச பேருந்து சேவையின் அடிப்படையில் மாணவர்களுக்கும் இது இலவசமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தில்லியில் காற்று மாசு கட்டுப்படுத்தப்படும் என 6வது உத்தரவாதமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லியை பசுமை தில்லியாக மாற்ற 2 கோடிக்கும் மேற்பட்ட மரங்கள் நடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதையடுத்து, அடுத்த 5 ஆண்டுகளில் தில்லியை குப்பைகள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

8வது உத்தரவாதமாக, பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக தில்லி மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

9வது உத்தரவாதத்தில் அங்கீகரிக்கப்படாத காலனிகளுக்கு சாலை, குடிநீர் விநியோகம், சிசிடிவி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. 

10வது மற்றும் கடைசி உத்தரவாதத்தில், குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தரமான வீடுகள் அமைத்துத் தரப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதை வெளியிட்ட பிறகு பேசிய அரவிந்த் கேஜரிவால்,

"தில்லிக்காக நான் 10 உத்தரவாதங்களை அளித்துள்ளேன். இது தேர்தல் அறிக்கை அல்ல. அதற்கும் மேலானது. இந்த 10 விஷயங்கள்தான் தில்லி மக்களை பாதிப்புக்குள்ளாக்கிறது. தேர்தல் அறிக்கையில் இதைவிட நிறைய விஷயங்கள் இடம்பெறும். 

அதில் ஆசிரியர்கள், மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் என குறிப்பிட்ட பிரிவுகளுக்கென அறிவிப்புகள் இடம்பெறும். இந்த உத்தரவாதத்தில், எங்கள் ஆட்சியில் அறிவிக்கப்பட்ட இலவச திட்டங்கள் அனைத்தும் அடுத்த 5 ஆண்டுகளுக்குத் தொடரும் என உறுதியளித்துள்ளேன். இவை மிகப் பெரிய உத்தரவாதங்கள். இவற்றை அமல்படுத்த காலம் எடுக்கும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com